ஜெர்மனியில் பயங்கரம் : பாலத்தின் மீது சரக்கு தொடருந்துகள் மோதி விபத்து - ஒருவர் பலி!
ஜெர்மனியின் தெற்குப் பகுதியில் உள்ள மியூனிக் நகரில் இன்று (20) அதிகாலையில் இரண்டு சரக்கு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளானதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மியூனிக் நகரின் வடக்கு மாவட்டமான மில்பர்ட்ஷோஃபெனில் உள்ள ஒரு தொடருந்து பாலத்தின் மீது அதிகாலை 1:40 மணியளவில் இந்த மோதல் சம்பவித்துள்ளது.
தொடருந்து விபத்துக்கான காரணம்
தொடருந்துகள் அதிவேகமாக மோதிக்கொண்டதில், அவற்றின் இரண்டு பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு தூக்கி வீசப்பட்டு, பாலத்தில் இருந்து கீழே இருந்த வீதியில் விழுந்து நொறுங்கின.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் சுமார் 60 மீட்புப் படையினர் மற்றும் அவசரக்கால மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
விபத்து நடந்த தடம் சரக்கு தொடருந்துகளுக்காக மட்டுமே பிரத்தியேகமாகப் பயன்படுத்தப்படும் பாதை என்பதால், பிராந்திய மற்றும் தொலைதூர பயணிகள் தொடருந்து சேவைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தொடருந்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த தொடருந்து விபத்துக்கான துல்லியமான காரணம் என்ன என்பது குறித்து உள்ளூர் பொலிஸார் தற்பொழுது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை நேற்று மாலை லண்டனில் இடம்பெற்ற பயணிகள் தொடருந்து விபத்தில் ஒருவர் பலியானமை குறிப்பிடத்தக்கது.