தகரக்கொட்டிலில் வாழ்ந்து வரும் மக்கள்: அதிகாரிகளிடம் விடுத்துள்ள கோரிக்கை
திருகோணமலை மாவட்டம் பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட விலாங்குளம் கிராமத்தில் குடியிருப்பதற்கு வீடின்றி தகரக் கொட்டிலில் வாழ்ந்து வருவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
சுமார் 100க்கும் அதிகமான குடும்பங்கள் வாழ்ந்து வரும் இக்கிராம மக்கள் கூலித் தொழில்களை நம்பியே தங்களது சீவனோபாயத்தைக் கொண்டு செல்கின்றனர்.
1990 களில் ஏற்பட்ட யுத்த வன்முறை காரணமாக வெளியேற்றப்பட்ட இம்மக்கள் 2004இல் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட நிலையில் தகரக் கொட்டிலில் மழை, வெயில் காலங்களில் சிறு குழந்தைகளை வைத்துக் கொண்டு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.
திருகோணமலை கண்டி பிரதான வீதியிலிருந்து சுமார் 1.2 கிலோ மீற்றர் தூரத்தில் அமையப் பெற்றுள்ள இக் கிராமம் உட்கட்டமைப்பு வசதிகள் உட்படப் பல குறைபாடுகளும் இங்கு உள்ளதாக அப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
சீரான பாதை அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அசௌகரியங்களுடன் வாழ்வதாகவும், தொடர்ச்சியாகப் பல வருடங்களாக வீடின்றி தற்காலிக கொட்டில்களில் நிம்மதியான தூக்கமில்லாமல் பிள்ளைகளுடன் வாழ்வதாகவும் தெரிவிக்கின்றனர்.
பல முறை உரிய அதிகாரிகளுக்கு வீட்டுப் பிரச்சினைகள் தொடர்பில் முன்வைத்த போதும் தீர்வின்றியே தவிக்கிறோம் என அப் பிரதேச மக்கள் மேலும் கவலை வெளியிட்டனர்.
எனவே தங்களுக்கு நிரந்தரமான கல் வீட்டினை அமைக்கத் துரித நடவடிக்கைகளை
மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்குக் கோரிக்கை விடுக்கின்றனர்.
