கொழும்பின் புறநகரில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து
ஹோமாகம கட்டுவன இரசாயன தொழிற்சாலையில் தீப்பிடித்த களஞ்சியசாலை ஒன்றுக்கு தேவையான சுற்றாடல் அனுமதி பெறப்படவில்லை என மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் அஜித் வீரசுந்தர தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தினால், அப்பகுதியின் வளிமண்டலத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும். இதனால் தொழிற்சாலைக்கு அருகில் வசிக்கும் மக்கள் அவதானமிக்க நிலைமையில் உள்ளனர்.
இதன் காரணமாக முகக் கவசம் அணியுமாறு கூறப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இரசாயன கழிவுகள்
தீயில் இரசாயனம் கலந்ததால், தொழிற்சாலையை சுற்றியுள்ள மின் கம்பிகள் மற்றும் சுவர்களில் இரசாயன கழிவுகள் பதிந்துள்ளது.
மின்சார சபையின் ஊழியர்கள் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். எனினும் தீ பரவலுக்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
தீயை கட்டுப்படுத்த ஹொரணை மாநகரசபை, தெஹிவளை மற்றும் கோட்டை மாநகரசபையின் சுமார் பத்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டன.
தீ விபத்து
தீயினால் தொழிற்சாலைக்கு ஏற்பட்ட நட்டம் இதுவரை கணக்கிடப்படவில்லை.
தீ விபத்துக்குள்ளான தொழிற்சாலையைச் சுற்றியுள்ள நான்கு தொழிற்சாலைகளுக்கும் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.




