மாகாண சபைத் தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு அரசுக்கு கோரிக்கை
நீண்ட காலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல்களை மேலும் தாமதிக்காமல் உடனடியாக நடத்துமாறு சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாட்டு அமைப்பு (PAFFREL) அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் பெபரல் அமைப்பு இந்த விடயத்தை கோரியுள்ளது.
கடந்த 2014 செப்டெம்பர் 20 ஆம் தியதியுடன் மாகாண சபைகளின் பதவிக்காலம் முடிவடைந்ததையும், அதனைத் தொடர்ந்து கடந்த 11 ஆண்டுகளாக தேர்தல்கள் நடத்தப்படாமல் உள்ள நிலைமை கவலைக்குரியதாக அமைந்துள்ளது என பெபரல் PAFFREL எனும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

தற்போதுள்ள சட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆறு ஆண்டுகளுக்கும் ஒரு முறை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றாலும், பிந்தைய அரசுகள் இதற்குத் தேவையான சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாமதம், பொதுமக்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடையே பெரும் அக்கறையை ஏற்படுத்தியுள்ளது என்றும், மாகாண மட்டத்தில் தேர்தல் நடைமுறையை மீட்டெடுக்க வேண்டிய அவசியம் அதிகரித்துள்ளதாகவும் பெபரல் PAFFREL கூறியுள்ளது.
தேர்தல்களை நடத்தத் தவறுவது அரசியலமைப்புச் சட்டத்திற்கும் ஜனநாயகத் தத்துவங்களுக்கும் எதிரானது என PAFFREL எச்சரித்துள்ளது.
இந்நிலையில், தற்போது மாகாண சபைச் சட்டத்தையோ அல்லது மாகாண சபைத் தேர்தல் சட்டத்தையோ திருத்த முயற்சிப்பது மேலும் தேர்தல்களை தாமதிக்கச் செய்யும் அபாயம் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, தேர்தல்களை தாமதமின்றி நடத்துவதற்கான சட்டப்பூர்வ கடமைகளை முக்கியமாக செயல்படுத்த வேண்டிய அவசியத்தை பெபரல் PAFFREL வலியுறுத்தியுள்ளது.  
 
    
     
    
     
    
     
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        