மட்டக்களப்பின் ஊடக முன்னோடி ஜோசப் பரராசசிங்கம்: ஒரு வரலாற்று பதிவு
ஜோசப் அண்ணன் என நாம் அன்போடு அழைக்கும் ஜோசப் பரராசசிங்கத்தின் 16 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
தமிழ் பற்றாளர், ஊடகவியலாளர், மனிதஉரிமை செயற்பாட்டாளர், நாடாளுமன்ற உறுப்பினர் என பல தளங்களில் கால் பதித்த ஜோசப் பயணித்த காலங்களில் எனக்கு மிகவும் பிடித்த காலம் அவர் ஊடகவியலாளராக செயற்பட்ட காலம் தான்.
1980களிலிருந்து 1990வரையான காலத்தில் அவரோடு ஒரு ஊடகவியலாளராக மிக நெருக்கமாக பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
ஊடகவியலாளராக ஜோசப் பரராசசிங்கத்தின் பயணம்
ஜோசப் 1960களிலிருந்து செய்தியாளராக பணியாற்ற தொடங்கினார். குணசேனா பத்திரிகை நிறுவனம் வெளியிட்ட தினபதி, சிந்தாமணி, சண் போன்ற பத்திரிகைகளுக்கு மட்டக்களப்பு செய்தியாளராக அவர் பணியாற்றி வந்தார்.
தினபதி பத்திரிகையில் பணியாற்றிய செய்தியாளர்களுக்கு அப்பத்திரிகை நிறுவனத்தாலும் ஆசிரிய பீடத்தாலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த கட்டுப்பாடுகளை கடந்து சுதந்திரமாக செயற்படும் தனித்துவத்தை ஜோசப் கொண்டிருந்தார்.
1980களில் நான் மட்டக்களப்பில் ஊடகவியலாளராக பணியாற்ற ஆரம்பித்த காலம். அக்காலத்தில் பி.ஜோசப், எஸ் நாகராசா, வீ.சு.கதிர்காமத்தம்பி, ஆர். உதயகுமார், ஆர்.நித்தியானந்தன், செழியன் பேரின்பநாயகம் மற்றும் நான் உட்பட விரல் விட்டு எண்ணக்கூடிய மிகச்சொற்பமான செய்தியாளர்களே மட்டக்களப்பு நகரில் இருந்தனர்.
தனித்துவமாக ஒவ்வொருவரும் செயற்பட்டாலும் ஒற்றுமையாக செயற்பட்டோம்.
கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம்
1980களின் பின் படையினரின் நெருக்குவாரங்கள் மெல்ல மெல்ல அதிகரித்து வந்த வேளையில் செய்தியாளர்களுக்கு என ஒரு சங்கத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணக்கரு உதயமானது.
அக்காலத்தில் கொழும்பில் உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் என்ற ஒரு சங்கம் தான் இருந்தது. அவர்கள் பிராந்திய செய்தியாளர்களின் நலன்களில் அக்கறை பட்டது கிடையாது. பிராந்திய செய்தியாளர்களை தமது சங்கத்தில் இணைத்து கொண்டதும் கிடையாது.
இதனால் கிழக்கு மாகாணத்தில் உள்ள செய்தியாளர்களை இணைத்து கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் 1982ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் முதலாவது தலைவராக ஜோசப் தெரிவு செய்யப்பட்டார். செயலாளராக செல்லையா நாகராசா தெரிவு செய்யப்பட்டார். மட்டக்களப்பு திருகோணமலை அம்பாறை மாவட்டங்களில் இருந்த செய்தியாளர்கள் இதில் இணைக்கப்பட்டனர்.
கிழக்கு மாகாணத்தில் செய்தியாளர்களுக்கு என உருவாக்கப்பட்ட முதலாவது சங்கம் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் தான். கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் 2004ஆம் ஆண்டு வரை சமூக அரசியல் ஊடகத்துறை என பல மட்டங்களில் சிறப்பாக செயற்பட்டதை கிழக்கு மாகாண மக்கள் மட்டுமன்றி இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் அறிவார்கள்.
சமூக அரசியல் துறை
ஊடகத்துறையில் மட்டுமன்றி சமூக அரசியல் துறைகளிலும் சிறப்பாக செயற்படுவதற்கு அத்திவாரம் இட்டு வழிகாட்டியாகவும் ஆலோசகராகவும் செயற்பட்டவர் ஜோசப் ஆவார்.
1980களின் பின் படையினரின் நெருக்குவாரங்களும் கைதுகளும் மனித உரிமை மீறல்களும் அதிகரித்து வந்தது. பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களை பேசுவதற்கு கைது செய்யப்பட்டவர்களை மீட்பதற்கு என நாடாளுமன்ற உறுப்பினர்கள் என யாரும் இல்லாத அனாதரவான நிலையிலேயே மட்டக்களப்பு மக்கள் காணப்பட்டனர்.
1983ஆம் ஆண்டின் பின்னர் 6வது திருத்த சட்டத்தை ஏற்று சத்தியபிரமாணம் செய்யாததால் தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி இழந்திருந்தனர்.
அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான தேவநாயகம், இராசதுரை போன்றவர்களே பதவியில் இருந்தனர். ஆனால் அரச தரப்பு அமைச்சர்களாக இருந்த காரணத்தினாலோ என்னவோ கைது செய்யப்படும் இளைஞர்கள் பற்றியோ அல்லது மனித உரிமை மீறல்கள் பற்றியோ அவர்கள் வாய் திறப்பதில்லை.
அவ்வேளையில் ஊடகவியலாளராக இருந்த ஜோசப் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் பற்றிய விபரங்களை சேகரிப்பதிலும் மனித உரிமை மீறல் சம்பவங்களை திரட்டி சர்வதேச மன்னிப்பு சபை போன்ற சர்வதேச அமைப்புகளினது கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.
ஊடகவியலாளர் என்ற ரீதியில் பொலிஸ் உயர் மட்டங்களுடன் இருந்த நட்பை பயன்படுத்தி சில இளைஞர்களை அவர் விடுவித்திருந்தார்.
உயர் அதிகாரிகளின் மோசடி
1978 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மட்டக்களப்பை பெரும் அழிவுக்கு உட்படுத்திய சூறாவளி வீசியது. அந்த சூறாவளியின் பின்னர் பெருந்தொகையான நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு நிவாரணப்பணிகள் நடைபெற்றன. அந்த புனரமைப்பு நிவாரணப்பணிகளில் ஊழல் மோசடிகளும் பெருமளவு இடம்பெற்றது.
ஆளும் அரசியல்வாதிகளின் பக்க பலத்துடன் உயர் அதிகாரிகள் சிலர் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டிருந்தனர்.
சில கிராமங்களில் கட்டிடங்கள் கட்டப்பட்டதாக கணக்கு காட்டி பல இலட்சம் ரூபாய்கள் மோசடி செய்யப்பட்டன.
நிவாரணத்திற்கென வந்த பால்மா மற்றும் உலர் உணவு பொருட்களை மொத்த விற்பனை வர்த்தகர்களுக்கு விற்று நிவாரணப்பொருட்களை ஏப்பம் விட்டனர்.
இந்த ஊழல் மோசடிகளை ஆதாரங்களுடன் துல்லியமான தரவுகளுடன் சூறாவளி பூராயம் என்ற தலைப்பில் ஜோசப் தொடர்கட்டுரை ஒன்றை சிந்தாமணியில் எழுதினார். புலனாய்வு செய்தி திரட்டல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அக்கட்டுரை ஒரு சிறந்த உதாரணமாகும்.
இன்றைய இளம் ஊடகவியலாளர்கள் புலனாய்வு செய்தி திரட்டல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அக்கட்டுரை தொடரை தேடி வாசிக்க வேண்டும்.
சூறாவளி பூராயம் என்ற கட்டுரை வெளிவந்த போதுதான் இவ்வளவு பெரிய ஊழல் மோசடி நடந்திருக்கிறது என்பதை மக்கள் அறிந்து கொண்டனர். ஆனாலும் என்ன ஊழல் மோசடி செய்தவர்கள் ஆளும் கட்சி அமைச்சர்களின் செல்வாக்கினால் தப்பித்து கொண்டனர்.
மொழிப்புலமையும் துணிச்சலும்
அதேபோன்று மட்டக்களப்பு சிறை உடைப்பின் போதும் அவரின் செய்தி தேடலையும் தமிழ் மக்களின் நலன் என்ற நிலையில் நின்று சில செய்திகளை வெளியிடாமல் இரகசியம் காத்ததையும் கண்டு வியந்திருக்கிறேன்.
அவ்வேளையில் இளம் ஊடகவியலாளராக இருந்த எனக்கும் நித்தியானந்தனுக்கும் ஆசான் என்ற நிலையில் இருந்து அவர் வழிகாட்டியிருந்தார்.
1990ல் அவர் நாடாளுமன்ற உறுப்பினராகும் வரையான காலப்பகுதியில் ஊடகவியலாளராக மனித உரிமை செயற்பட்டாளராக பணியாற்றிய காலமே ஜோசப்பின் பொற்காலம் என நான் கருதுகிறேன்.
இதற்கு அவரின் மொழிப்புலமையும் துணிச்சலும் தமிழ் பற்றுமே காரணம் என்பேன். 2004ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து கருணா பிரிந்து செல்வதாக அறிவித்த காலப்பகுதியில் தான் பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களை அழைத்த கருணா பிரிந்து செயற்பட இருக்கும் தன்னுடன் தான் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் விடுதலைப்புலிகளின் தலைமையுடன் தொடர்பை வைக்க கூடாது என உத்தரவிட்டிருந்தார்.
ஏனைய வேட்பாளர்கள் அச்சத்தின் காரணமாக தவிர்க்க முடியாத சூழலில் அதற்கு சம்மதித்தனர். ஜோசப் பரராசசிங்கம் மட்டும் கருணாவின் கோரிக்கையை அல்லது உத்தரவை ஏற்க மறுத்து விட்டார்.
வடகிழக்கு தமிழர் தாயக கோட்பாட்டை கைவிட முடியாது. அதற்காக போராடும் தலைமையையே நான் ஏற்றுக்கொள்கிறேன் என கூறியதுடன் கருணாவின் உத்தரவை ஏற்க மறுத்து விட்டார்.
இறக்கும் வரை கொள்கையிலும் தமிழ் பற்றிலும் உறுதியாக இருந்த ஒரு உயர்ந்த மனிதராக ஜோசப்பை பார்க்கிறேன்.
என் 40 வருட ஊடக பயணத்தில் எனக்கு வழிகாட்டிகளாக இருந்தவர்களில் மிக பிரதானமானவராக ஜோசப்யே பார்க்கிறேன்.
உங்களைப்போன்ற ஆளுமையும் துணிச்சலும் எந்த சலுகைகளுக்கும் விலைபோகாத ஊடகவியலாளர் சமூகம் ஒன்று மட்டக்களப்பில் உருவாகும் என்ற நம்பிக்கையோடு உங்களுக்கு எனது அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறேன்.
மீள் பதிவு

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam
