எப்ஸ்டீன் குற்றச்சாட்டு விவகாரம்: ஹிலாரி - பில் கிளின்டன் நேரில் முன்னிலையாகி வாக்குமூலம்
மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரித்து வரும் அமெரிக்க நாடாளுமன்றக் குழுவின் முன், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் மற்றும் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன் ஆகியோர் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
நேற்று(26.02.2026ஹிலாரி கிளின்டன் முன்னிலையாகிய நிலையில், இன்று(27.02.2026) பில் கிளின்டனும் நேரில் சென்று விளக்கம் கொடுக்கவுள்ளார்.
நீண்டகாலமாக இந்த விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த கிளின்டன் தம்பதியினர், நாடாளுமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளுக்கு அஞ்சி தற்போது இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
நேரில் முன்னிலையாகும் முக்கிய தலைமைகள்
நியூயோர்க்கின் சப்பாகுவா பகுதியில் இந்த விசாரணை நடைபெறவுள்ளது.

பில் கிளின்டன் கடந்த காலங்களில் எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்ததை ஒப்புக்கொண்ட போதிலும், அவரது சட்டவிரோத செயல்கள் குறித்து தமக்கு எதுவும் தெரியாது எனத் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
அதேபோன்று, ஹிலாரி கிளின்டன் தமக்கு எப்ஸ்டீனைத் தனிப்பட்ட முறையில் தெரியாது என்று கூறியுள்ளார்.

இந்த விசாரணையானது, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், "யாரும் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல" என்பதை நிரூபிக்கவே இந்த விசாரணை நடத்தப்படுவதாகக் குழுவின் தலைவர் ஜேம்ஸ் கோமர் தெரிவித்துள்ளார்.
கடந்த 1983ஆம் ஆண்டு ஜெரால்ட் ஃபோர்டு முன்னிலையாகிய பிறகு, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒருவர், நாடாளுமன்றக் குழுவின் முன் சாட்சியமளிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.