இலங்கைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கும்பல் தொடர்பில் அம்பலம்! விமான நிலையத்தை சுற்றிவளைத்த பொலிஸார்
இரத்மலானை சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள அதியுயர் பாதுகாப்பு வலையத்தில் சட்டவிரோதமாகவும் இரகசியமாகவும் நடத்தப்பட்டு வந்த தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையமொன்றை சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
கல்கிஸ்சை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று அவர்களை சுற்றிவளைத்துப் பிடித்துள்ளனர். இவ்விடத்தில் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த மாலைத்தீவு நாட்டைச் சேர்ந்த ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுமார் 5 கோடி ரூபாய் பெறுமதியான 8 அடி உயரமுடைய செயற்கைக்கோள் ரேக் ஒன்று, பயன்படுத்தப்பட்ட 10 செயற்கைக்கோள் ரிசீவர்கள், பயன்படுத்தப்படாத 4 செயற்கைக்கோள் ரிசீவர்கள், 16 வெற்று செயற்கைக்கோள் பெட்டிகள், 5 பெரிய அளவிலான செயற்கைக்கோள் டிஷ்கள், ஒரு பெரிய ரக தொலைக்காட்சி, 3 கணினிகள் மற்றும் 1 ஸ்டார்லிங்க் சாதனம் என்பன பொலிஸார் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதிஉயர் பாதுகாப்பு
இரத்மலானை சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள அதிஉயர் பாதுகாப்பு வலையத்திற்குட்பட்ட அத்திடிய பகுதியில், சுற்றுலா நிறுவனம் என்ற போர்வையில் சட்டவிரோத தகவல் தொடர்பு நிலையமொன்று நடத்தப்பட்டு வருவதாக கல்கிஸ்சை குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரிக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதற்கமைய, கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றத்திடம் பெறப்பட்ட பிடியாணை உத்தரவுக்கு அமைய, இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இந்த சட்டவிரோத நிலையமானது, தனியார் தொலைபேசி நிறுவனமொன்றின் தரவுகளைப் பயன்படுத்தி செயற்கைக்கோள் மூலம் தொலைக்காட்சி அலைவரிசைகளைப் பதிவிறக்கம் செய்து, வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப அந்த அலைவரிசைகளையும் வானொலிச் சேவைகளையும் சர்வதேச அளவில் சட்டவிரோதமாக விநியோகிக்கும் ஒரு மையமாக இயங்கி வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதிஉயர் பாதுகாப்பு வலையத்தில் அமைந்துள்ள இந்த மையம் மாலைத்தீவு நாட்டவர்களால் இயக்கப்பட்டு வந்துள்ளது.
இந்த குழுவினர் ஐஎஸ் அல்லது வேறு ஏதேனும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புகளைப் பேணி, தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் ஏதேனும் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டனரா என்பது குறித்து விரிவான விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விபத்து ஏற்பட்டு ரத்த காயத்துடன் வலியில் துடிக்கும் தமிழ், பதறிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam