இலங்கைக்கு தனிப்பட்ட நிதிசேகரிப்பின் மூலம் உதவும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டம்
கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கைக்கு உதவ ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டம், நிதிசேகரிப்பு திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டம்
இந்த நிதிசேகரிப்பின் மூலம் நெருக்கடியால் பெரிதும் பாதிக்கப்பட்ட துறைகளில் சுகாதாரம் மற்றும் உணவுத் துறைகளை மேம்படுத்தவுள்ளதாக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டம் அறிவித்துள்ளது.
இலங்கையர்களை மீளக் கட்டியெழுப்ப உங்கள் உதவி தேவை என்ற அடிப்படையில், இந்த திட்டத்தை ஐக்கிய நாடுகளின் அமைப்பு முன்னெடுத்துச் செல்கிறது.
தனிப்பட்டவர்களின் சிறு தொகை மூலம் பெருந்தொகை பணத்தை ஈட்டும் தளம் (individual crowdfunding platform) இதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
இதனை www.undp.org/srilanka/donate என்ற இணையத்தின் ஊடாக மேற்கொள்ளலாம்.
உலக மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு
இலங்கையில் பாதிக்கப்படக்கூடிய 63 லட்சம் மக்களுக்கு நன்கொடை மற்றும் நிவாரணம் வழங்க உலகெங்கிலும் உள்ள மக்களை இந்த முயற்சி மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த நிதிச்சேகரிப்பு தளத்தின் மூலம் நீங்கள் 5 அல்லது 15 அல்லது அதற்கு மேற்பட்ட டொலர்களை செலுத்தி இலங்கையின் சுகாதார மற்றும் உணவுத் துறைகளுக்கு உதவலாம் என்று ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டம் அறிவித்துள்ளது.
இந்த பங்களிப்புகள் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களில் தற்போதைய பற்றாக்குறைக்கு உதவவும், விவசாயிகளுக்கு அறுவடைக்கு விதைகளை வாங்கவும், குடும்பங்கள் மத்தியில் வீட்டுத்தோட்ட நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் பொருட்களை உருவாக்கவும் பயன்படுத்தப்படும்.
ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளர் நாயகமும், ஆசிய மற்றும் பசுபிக்
பிராந்தியத்திற்கான பிராந்தியப் பணிப்பாளருமான கன்னி விக்னராஜாவின்
முயற்சியில் இலங்கையை கட்டியெழுப்புவோம் என்ற அடிப்படையில் இந்த திட்டம்
முன்னெடுக்கப்பட்டுள்ளது.