கிளிநொச்சி A9 வீதியில் கனரக வாகனங்களுக்கு நேரக் கட்டுப்பாடு - சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
கிளிநொச்சி A9 வீதியின் இரணைமடு சந்தி முதல் பரந்தன் சந்தி வரை பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், ரிப்பர் வாகனங்கள் உள்ளிட்ட கனரக வாகனங்களின் போக்குவரத்துக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளது.
இதன்போது, கடந்த ஜூன் 30ஆம் திகதி கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற வீதி விபத்துகளைத் தடுப்பது மற்றும் எதிர்கால சந்ததியினரை நல்வழிப்படுத்துவது தொடர்பான தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.
சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்
இதன்படி, தினமும் காலை 7.00 மணி முதல் 8.00 மணி வரை மற்றும் பிற்பகல் 1.00 மணி முதல் 2.00 மணி வரை, இரணைமடு சந்தி முதல் பரந்தன் சந்தி வரையிலான A9 வீதிப் பகுதியில் ரிப்பர் வாகனங்கள் உள்ளிட்ட கனரக வாகனங்களின் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என கிளிநொச்சி பிராந்தியத்திற்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் புத்திக குணசேகர தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இன்று(03.07.2026) கிளிநொச்சி நகரப் பகுதியில் ரிப்பர் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, சாரதிகளுக்கு புதிய போக்குவரத்து ஒழுங்கு மற்றும் நேரக் கட்டுப்பாடு தொடர்பான அறிவுறுத்தல்கள் பொலிஸாரால் வழங்கப்பட்டுள்ளன.
பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பையும் வீதி விபத்துகளை குறைப்பதையும் நோக்கமாகக் கொண்ட இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகள் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.