பிரித்தானியாவில் கடுமையான பனிப்பொழிவு! நூற்றுக்கணக்கான பாடசாலைகள் மூடல்
வடக்கு இங்கிலாந்தின் சில பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக நூற்றுக்கணக்கான பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், போக்குவரத்திலும் தடைகள் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, யோர்க்ஷயர் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மேலும் அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா தடுப்பூசி போடும் செயற்பாடுகளும் இதனால் பாதிக்கப்பட்டிருந்ததாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வடமேற்கு மற்றும் டெர்பிஷையரின் சில பகுதிகளும் மோசமான வானிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலைகள் முற்றிலும் ஆபத்தானவை
பனிப்பொழிவு காரணமாக சாலை வழியாக பயணம் மேற்கொள்வது தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், சாரதிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சாரதிகளின் நிலைமை முற்றிலும் மோசமானது என தனியார் நிறுவனம் ஒன்றை நடத்திவரும் கிறிஸ் ஜோன்சன் என்பவர் கூறியுள்ளார்.
யோர்க்ஷயரில் சுமார் 400 பாடசாலைகள் மோசமான வானிலை காரணமாக மூடப்பட்டுள்ளன. டெர்பிஷையரில் குறைந்தது பத்து பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், வடக்கு யோர்க்ஷயரி கொரோனா கட்டுப்பாடுகளை மீற வேண்டாம் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.