கிழக்கு மாகாணம் மற்றும் 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை மற்றும் மொணராகலை ஆகிய மாவட்டங்களுக்கும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெப்பமான வானிலை தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, பகல் வேளையில் மனித உடலினால் உணரப்படும் வெப்பத்தின் அளவான ‘வெப்பச் சுட்டெண்’, குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் 'எச்சரிக்கை மட்டத்தை' எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வளிமண்டலத்தின் ஒப்பீட்டு ஈரப்பதம் மற்றும் அதிகபட்ச வெப்பநிலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்த ‘வெப்பச் சுட்டெண்’ கணக்கிடப்படுகிறது.
வெயிலில் அதிக நேரம் வேலை செய்வது அல்லது வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவது உடலுக்கு மிகுந்த சோர்வை ஏற்படுத்தும். அத்துடன், தசைப்பிடிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.
உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கத் தேவையான அளவு நீரையும் திரவ உணவுகளையும் உட்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடுமையான வெயில் நிலவும் வேளைகளில், அதிக சிரமத்தை ஏற்படுத்தும் வெளிப்புற செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.