வடக்கு - கிழக்கில் கோரிக்கைகளை முன்வைத்து வீதிக்கிறங்கிய சுகாதார ஊழியர்கள்
நாடு முழுவதும் உள்ள சுகாதார ஊழியர்கள் இன்று (02.04.2024) பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.
சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியே குறித்த பணி புறக்கணிப்பு மேற்கொள்ளப்படுகின்றது.
அதன்படி, 72 தொழிற்சங்கள் இணைந்து 4 மணித்தியாலங்களுக்கு சேவையில் இருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
தமது பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாமையினால் தொழிற்சங்க நடவடிக்கையில்
ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சானக
தர்மவிக்கிரம தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, இன்று காலை 08 மணி முதல் நண்பகல் 12 மணி வரை குறித்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி - தீபன் - கஜிந்தன்
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பணியாற்றும் தொழிற்சங்கங்களை சேர்ந்த 180 வரையான சிற்றூழியர்கள் பணி புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்.
காலை 6:30 மணி தொடக்கம் 10 மணி வரை இந்த பணி புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதால் குறித்த நேரப் பகுதியில் மருத்துவமனைக்கு சென்ற நோயாளிகள் பெரும் சிரமத்தினை எதிர்கொண்டுள்ளனர்.
செய்தி - கீதன்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை
சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணி புறக்கணிப்பை முன்னெடுத்திருந்த நிலையில், வைத்தியசாலைக்கு வருகைதந்த நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
வைத்தியசாலையில் கடமையில் உள்ள பல்வேறு பிரிவினரும் நான்கு மணி நேரம் கடமைக்கு செல்லாமல் பணி புறக்கணிப்பை ஈடுபட்டதுடன் கவனயீர்ப்பு போராட்டத்திலும் கலந்துகொண்டுள்ளனர்.
இதன்போது, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம்
முன்னெடுக்கப்பட்டதுடன் பல்வேறு கோசங்களும் எழுப்பப்பட்டுள்ளன.
செய்தி - குமார்
கிளிநொச்சி பொது வைத்தியசாலை
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை முன்பாக இன்று பகல் 11.30 மணிமுதல் 12.30. மணிவரையும் சுகாதார ஊழியர்களின் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து தாதியர்களும் கடமையிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கைகளில்
ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கத்தின் அறிவித்தலுக்கமைய குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
செய்தி - யது
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |