வவுனியாவில் தனியார் வைத்தியசாலைகள் மீது சுகாதார பரிசோதகர்கள் அதிரடி சோதனை
வவுனியாவில் தனியார் வைத்தியசாலைகள் மீது சுகாதார பரிசோதகர்களால் விசேட சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோவிட்- 19 தாக்கமானது வவுனியாவில் அதிகரித்து வரும் நிலையில், இன்று இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கோவிட் தாக்கத்தை கட்டுப்படுத்தும் முகமாகச் சுகாதாரப் பிரிவினரால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தனியார் வைத்தியசாலை ஒன்றில் கடமையாற்றும் மூன்று பேர் கோவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டிருந்தனர்.
இதனையடுத்து, வவுனியாவில் உள்ள தனியார் வைத்தியசாலைகளில் சுகாதாரப் பிரிவினரால் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது அங்கு உள்ள சுகாதார வசதிகள் தொடர்பில் கவனம் செலுத்தியதுடன், சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா, அங்கு கடமையாற்றுவோர் மற்றும் வந்து செல்வோர் முககவசங்களை அணிந்துள்ளார்களா, சமூக இடைவெளி பேணப்படுகின்றனவா போன்ற விடயங்கள் குறித்துப் பார்வையிட்டுள்ளனர்.
மேலும் கோவிட் தொடர்பான சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றாத தனியார் வைத்தியசாலைகளுக்கு
எதிராக முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.



