உலக சுகாதார அமைப்பு இலங்கை தொடர்பில் வெளியிட்ட அறிக்கை
உலக சுகாதார அமைப்பின் (WHO) 2025 ஆம் ஆண்டுக்கான தரவரிசை பட்டியலில் இலங்கையின் சுகாதார துறை 158ஆவது இடத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு குறைந்தளவான மருத்துவ வளங்களை கொண்ட நாடுகளில் 40 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அதற்காக வழங்கப்பட்ட புள்ளிகள் 54.55 ஆகும்.
இது சராசரியை விட குறைவானது என்பதால் சுகாதார குறிகாட்டிகளின் படி ஆரோக்கியமற்றதாகும் என உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
கணக்கிடப்படும் குறிகாட்டிகள்
புதிதாக வெளியிடப்பட்ட உலகளாவிய சுகாதார குறியீட்டின் படி, நிச்சயிக்கப்பட்ட பத்து படிமுறைகளை கொண்டு கணிப்பிடும் போது நாடுகளுக்கு இடையிலான சுகாதாரம் கணிசமளவு வேறுபாடு காணப்படுவதாக தெரியவந்துள்ளது.
இந்த கணிப்பீடுகளில் ஆயுட்காலம், இரத்த அழுத்த அளவுகள், இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் (நீரிழிவு அபாயத்தின் முக்கிய குறிகாட்டி), உடல் பருமன், மனச்சோர்வு, மகிழ்ச்சி, மது அருந்துதல், புகையிலை பாவனை, உடலாரோக்கிய தன்மை மற்றும் சுகாதார சேவைகளுக்கான அரசாங்க செலவு ஆகியவை அடங்கும்.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இலங்கையில் இறப்புக்கான முக்கிய காரணங்களில் பக்கவாதம் மற்றும் இருதய நோய்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
இருப்பினும், இலங்கையில் பிறக்கும் போதான ஆயுட்காலம் , 2000 ஆம் ஆண்டில் 71.5 வருடங்களில் இருந்து 2021 இல் 77.2 வருடங்களாக அதிகரித்துள்ளது.