இந்திய மிளகாய் ஏற்றுமதியாளர்களுக்கு 300 கோடி ரூபாய் பாக்கி வைத்த இலங்கை
இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மிளகாயை ஏற்றுமதி செய்யும் வர்த்தகர்களுக்கு பணம் செலுத்தப்படவில்லை என இந்தியாவில் வெளியாகும் டைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு மிளகாயை ஏற்றுமதி செய்யும் இந்திய வர்த்தகர்களுக்கு கடந்த சில மாதங்களாக செலுத்த வேண்டிய பணத்தை செலுத்தாததன் காரணமாக இந்திய மிளகாய் சந்தையிலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இலங்கை, இந்திய மிளகாய் ஏற்றுமதியாளர்களுக்கு 250 முதல் 300 கோடி ரூபாய் வரையான பணத்தை செலுத்த வேண்டியுள்ளது.
இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் இருந்தே இலங்கைக்கு அதிகளவில் மிளகாய் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஆந்திராவில் இருந்து இலங்கை, பங்களாதேஷ் மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கே அதிகளவில் மிளகாய் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 2020-21 ஆம் ஆண்டுகளில் பல்வேறு நாடுகளுக்கு ஒரு கோடி குவிண்டால் மிளகாய் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதுடன் அவற்றில் 30 சத வீதம் இலங்கைக்கே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
சீனா உள்ளிட்ட நாடுகளின் வர்த்தகர்கள் வழங்கும் விலைகளுடன் ஒப்பிடும் போது, இலங்கை வர்த்தகர்கள் வழங்கும் விலைகள் அதிகம் என ஆந்திராவின் முன்னணி மிளகாய் ஏற்றுமதியாளரான சி. வெங்கடேஸ்வர ராவ் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இலங்கையின் வர்த்தகர்கள் பணத்தை செலுத்தாமைக்கு எதிராக இதுவரை எவரும் முறைப்பாடுகளை செய்ய முன்வரவில்லை. முறைப்பாடு செய்தால், பெறப்பட வேண்டிய பணத்தை பெறுவதில் சிக்கல் ஏற்படும் என இந்திய வர்த்தகர்கள் அஞ்சுவதாகவும் அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.