ஹட்டன் - குயில்வத்தை பகுதியில் வீதிக்கு இறங்கிய மக்கள் (Photos)
ஹட்டன் - குயில்வத்தை பகுதியில் மதுபானசாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டமானது “மதுபானசாலையை திறந்து வாழ்க்கையை சீரழிக்காதே” என்ற தொனிப்பொருளில் நேற்று (21.09.2023) மாலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது சுமார் 200 தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் இணைந்து ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் குயில்வத்தை எண்ணெய் நிரப்பு நிலையத்திற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குயில்வத்தையிலுள்ள பிரசித்தி பெற்ற சிவன் ஆலயத்திற்கு சமீபமாக குயில்வத்தை ரொசல்ல பகுதியில் மதுபானசாலை ஒன்றினை அமைப்பதற்கு மதுவரி திணைக்களத்தில் அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும், அதற்கு எதிர்ப்பு இருப்பின் 14 பிரதேச செயலாளருக்கு அறிவிக்க வேண்டும் என தெரிவித்து அறிவித்தல்கள் ஒட்டப்பட்டுள்ளன.
மதுபானசாலை அமைக்க எதிர்ப்பு
இந்த அறிவித்தலை தொடர்ந்து குயில்வத்தை பகுதியில் வாழும் மக்கள் மதுபானசாலை அமைக்க வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில தினங்களாக எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
மலையகம் 200 என பல விழாக்களை ஒழுங்கு செய்திருக்கிறார்கள். இன்று இந்த 200 முன்னிட்டு 200 பாடசாலைகளை அபிவிருத்தி செய்திருக்கலாம், தோட்ட வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்திருக்கலாம், இல்லாவிட்டால் 200 வீடுகளை கட்டிக்கொடுத்திருக்கலாம், வீதிகளை அபிவிருத்தி செய்திருக்கலாம்.
இந்த மதுபானசாலை திறப்பதா இப்போது முக்கியம்? மலையகப் பகுதியில் உள்ள மதுபானசாலை காரணமாக இன்று கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட முக்கிய அடிப்படை தேவைகள் இல்லாது போயுள்ளன. இந்நிலையில் மீண்டும் ஒரு மதுபானசாலை திறக்க வேண்டுமா?
வட்டவளையிலிருந்து ஹட்டன் வரை உள்ள குறிப்பிட்ட தூரத்தில் சுமார் 7 மதுபானசாலை உள்ளன. இந்நிலையில் இன்னுமொரு மதுபானசாலை எதற்கு? இங்கு ஒரு கூட்டறவு கடையினை திறந்திருக்கலாம், மருந்தகம் ஒன்றினை திறந்திருக்கலாம், அவ்வாறு எதுவுமே செய்யாது ஒரு தனி மனிதனின் பிழைப்புக்காக ஒரு சமூகத்தையே அழிக்கிறார்கள் என தெரிவித்தார்.
நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
அத்துடன் மலையகப்பகுதியில் மதுசாலைகள் அதிகரிப்பின் காரணமாக பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. உழைக்கும் ஊதியம் முழுவதையும் சிலர் மதுபானசாலைகளுக்கு செலவிடுகின்றனர்.
இதனால் திறமையான மாணவர்கள் மற்றும் பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளன. எனவே இது குறித்து பொறுப்பு வாய்ந்தவர்கள் சிந்திக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதேவேளை சுமார் ஒரு மணித்தியாலங்கள் வரை போராட்டம் நடைபெற்றதை தொடர்ந்து மக்கள் களைந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.



