சோகத்தில் மூழ்கிய ஹட்டன் - ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்ட குடும்பத்தினரின் விபரம்
நானுஓயா - ரதெல்ல குறு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த ஹட்டன் டிக்ஓயாவில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரின் இறுதிக்கிரியைகள் இன்று அதிகாலை ஹட்டன் டிக்ஓயாவில் ஜும்மா பள்ளிவாசலில் இடம்பெற்றது.
தந்தையான 54 வயதான அப்துல் ரஹீம், தாயான 42 வயதான ஏ.ஆயிஷா, பிள்ளைகளான 11 வயது மரியம், 8 வயதான நபீஹா விபத்தில் உயிரிழந்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களாகும். 14 வயதான முகமது சைம் உறவினராகும்.
டிக்ஓயாவில் பள்ளிவாசலில் விசேட தொழுகையின் பின்னர் உயிரிழந்த ஐவரின் இறுதிக் கிரியைகள் இடம்பெற்றதுடன், பெருமளவான பிரதேச முஸ்லிம்கள் மற்றும் பிரதேசவாசிகள் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
அப்துல் ரஹீம் மற்றும் அவரது உறவினர் முகமது ஆகியோர் தனித்தனி கல்லறைகளிலும், தாய் மற்றும் மகள்கள் ஒரு கல்லறையிலும் அடக்கம் செய்யப்பட்டனர்.
வேனில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் பயணித்துள்ளதுடன், படுகாயமடைந்த நால்வர் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்தவர்களின் நினைவாக ஹட்டன் திக் ஓயா நகரில் உள்ள அனைத்து கடைகளும் நேற்று மூடப்பட்டு வெள்ளைக் கொடிகளால் பறக்கவிடப்பட்டிருந்தன.
விபத்தில் உயிரிழந்த வேன் சாரதி ஹட்டன் குடாகம பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதான ஆர்.என்.பி.தினேஷ் என்பவரின் சடலம் ஹட்டன் குடாகமவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
விபத்தை ஏற்படுத்திய 62 வயதுடைய பஸ் சாரதி சந்தேகத்தின் பேரில் நானுஓயா பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரை இன்று நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.