மகிந்தவின் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள அதிர்வுகள் மற்றும் அவசரத் தீர்வுகள்
மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுன, தமது கட்சியின் பல மாவட்ட மட்டத் தலைமை பதவிகளில் மாற்றங்களைச் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கு பதிலாக கம்பஹா மாவட்ட தலைவராக ராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அநுராதபுரம் மாவட்ட தலைவராக செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேனவை நீக்கி கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
உறுப்புரிமை ரத்து
இதேவேளை, அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிற்கு பதிலாக நாடாளுமன்ற உறுப்பினர் நிபுன ரணவக்க தற்காலிகமாக மாத்தறை மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் ரமேஸ் பத்திரனவுக்கு பதிலாக இராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்சன டி சில்வா, காலி மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட தேர்தல் சபை நேற்று(03) மாவட்ட தலைவர் - நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தலைமையில் கூடியுள்ளது.
இந்த சந்திப்பின் போது, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அத்துடன், நுவரெலியா ஹங்குரன்கெத்தவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் தீர்மானம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தலைமையில் இடம்பெற்றுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கேகாலை மாவட்ட மாநாட்டில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆமோதிக்கும் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் கேகாலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் கலந்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் குழு ஒன்று, தற்போதைய ஜனாதிபதி விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பது குறித்து, நேற்று ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புரு தலைமையில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் முதித டி சொய்சா மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.
இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பதவிக்கு அமர்த்தும் நோக்கில் சிறிலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் கம்பஹா மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன இணைந்து கூட்டு வேலைத்திட்டத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளை ஆரம்பித்துள்ளன.
எவ்வாறாயினும், கட்சியின் ஒழுக்கத்தை கடைப்பிடிப்பது தொடர்பாக அரசியல் பீடத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானங்களை அறிவிக்கும் கடிதத்தை சிறிலங்கா பொதுஜன பெரமுன தனது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ளது.
மேலும், கட்சி எடுக்கும் தீர்மானங்களை எதிர்க்கும் எந்தவொரு உறுப்பினரும் கட்சிக்குள் எந்த பதவியில் இருந்தாலும் அவர்களின் உறுப்புரிமை ரத்து செய்யப்படும் என கடிதத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |