சஜித் அணியினர் ரணிலுடன் இணைவார்களா? ஹரின்
ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்குள் எந்த சதித்திட்டங்களும் இல்லை எனவும், அந்த கட்சியில் உள்ள எந்த நாடாளுமன்ற உறுப்பினரும் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவர்கள் என நினைக்கவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எனினும் தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்க ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி உட்பட அனைத்து கட்சிகளுடனும் கட்டாயம் இணைந்து செயற்பட வேண்டும் என்பது தனது நிலைப்பாடு எனவும் அவர் கூறியுள்ளார்.
செய்தியாளர்கள் நேற்று எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே ஹரின் பெர்னாண்டோ இதனை குறிப்பிட்டுள்ளார்.
கேள்வி - உங்களது கட்சிக்குள் கருத்து முரண்பாடுகள் இருப்பதாக அறிய கிடைத்துள்ளதே?
பதில் - இல்லை. அப்படியான கருத்து முரண்பாடுகள் இல்லை. நான் கடந்த ஒன்றரை மாதங்களாக விடுமுறையில் இருந்தேன். கட்சிக்குள் பெரிய பிரச்சினை இருப்பதாக எனக்கு தெரியவில்லை. நான் அறிந்த வரையில் பிரச்சினைகள் இல்லை. இதனை என்னால் உறுதியாக கூற முடியும்.
கேள்வி - அப்படியானால், நாடாளுமன்ற அணியை உடனடியாக கூட்டி தலைமைத்துவதில் வேறு ஒருவரை நியமிப்பார்கள் என்ற அச்சம் இருக்கின்றதா?
பதில் - அப்படி எதுவும் இல்லை. அதனை செய்தவரிடம் தான் கேட்க வேண்டும். காரணம் எனது தலைவர் சஜித் பிரேமதாச. இதனால், மீண்டும் ஒரு முறை அதனை உறுதிப்படுத்த விசேடமாக எதனையும் செய்ய வேண்டியதில்லை.
நான் இரண்டு மாதங்கள் விடுமுறையில் இருந்தேன். கட்சியின் தலைமையை மாற்றுவது என்பது தேவையில்லாத வேலை.
தேவையற்ற அச்சமும், தேவையற்ற கதைகளையும் உருவாக்கும் தேவை யாருக்கு இருக்கின்றது என்பதை தேடிப்பார்க்க வேண்டும்.
கேள்வி - அப்படியானால், ஐக்கிய மக்கள் சக்தியை பிளவுப்படுத்திக் கொண்டு சிலர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைவார்கள் என்ற அச்சம் உள்ளதா?
பதில் - நான் நம்பவில்லை. ரணில் விக்ரமசிங்க என்பவர் அரசியலில் அனுபவம் கொண்ட புத்திசாலியான நபர்.
புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்து, மீண்டும் அவரிடம் செல்லும் அங்குமிங்கும் பாயக் கூடிய விசர் பிடித்தவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இருக்கிறார்கள் என்று நாங்கள் கருதவில்லை.
இந்த சந்தர்ப்பத்தில் ஐக்கிய மக்கள் சக்தி எதிர்க்கட்சி என்ற வகையில், ஐக்கிய தேசியக் கட்சி உட்பட அனைத்து கட்சிகளுடனும் இணைய வேண்டும். அப்படியில்லாமல் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது.
ஐக்கிய தேசியக் கட்சி தேவையில்லை என ஐக்கிய மக்கள் சக்தியாகிய நாங்கள் நினைத்தால் அதுவும் முட்டாள்த்தனம்.
அதேபோல் ஐக்கிய மக்கள் சக்தி தேவையில்லை என ஐக்கிய தேசியக் கட்சி நினைத்தால் அதுவும் முட்டாள்த்தனம்.
நாட்டின் அரசாங்கம் உண்மையில் தற்போது தோல்வியடைந்துள்ளது இந்த அரசாங்கத்தை தோற்கடித்து மக்களுக்கு நியாயத்தை வழங்க எதிர்க்கட்சிகள் என்ற வகையில் நாங்கள் ஓரிடத்தில் ஒன்று சேர வேண்டும்.
கேள்வி - நீங்கள் உட்பட 10 பேர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைய உள்ளதாக அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே கூறுகிறாரே?
பதில் - அது பச்சை பொய் என நான் நினைக்கின்றேன். ரணில் விக்ரமசிங்கவை பெரிதாக மதிக்கின்றோம்.
என்னை அரசியலுக்கு அழைத்து அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியும், முதலமைச்சர் பதவியும் அவரது காலத்திலேயே வழங்கப்பட்டது.
எனக்கு அவருடன் எந்த பிரச்சினையும் இல்லை. நான் அவரை சந்திக்கும் இடங்களில் கதைப்பேன். தொடர்பிலும் இருக்கின்றேன்.
கேள்வி - உங்களது கட்சிக்குள் சூழ்ச்சிகள் நடக்கும் என்று நீங்கள் இன்னும் நினைக்கவில்லையா?
பதில் - சூழ்ச்சி செய்ய வேண்டுமாயின் செய்ய இருப்பவன் நான். அப்படியான சூழ்ச்சிகள் நடக்காது எனவும் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் நாட்டில் உன்னை பணக்காரர் ஆக விடமாட்டேன்: புலம்பெயர்ந்தோர் ஒருவர் ஜேர்மனியில் சந்தித்த அதிர்ச்சி News Lankasri
