இனி நான்தான் கிரிக்கெட் ஆட வேண்டும்: ஹரின் ஆதங்கம்
இலங்கை கிரிக்கெட் அணி வரலாற்றில் முதன்முறையாக டி20 உலகக் கிண்ணப் போட்டித் தொடரின் முதல் சுற்றில் வெளியேறியமை தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தமது கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.
போட்டிகளில் தோல்வி என்பது பல வருடங்களாக காணப்படுகின்ற பிரச்சினை எனவும் அதனை தீர்க்க நீண்ட கால தீர்வொன்று அவசியம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
காலியில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த அவரிடம், “விளையாட்டுத்துறை அமைச்சர் என்ற வகையில், கிரிக்கெட்டுக்காக எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் என்ன? ” என்பது தொடர்பில் ஊடகவியலாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டது.
நீண்ட கால தீர்வு
இதற்கு பதில் வழங்கிய அவர், "இனி நான்தான் கிரிக்கெட் ஆட வேண்டும். விளையாட்டு அமைச்சராக நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறீர்கள்.
இனி போட்டியில் தோற்றால் நான் என்ன செய்வது? நான்தான் கிரிக்கெட் ஆட செல்ல வேண்டும்.அப்படி செய்ய முடியாது.
இது பல வருடங்களாக தொடரும் பிரச்சனை. நீண்ட கால தீர்வு தேவை.” என்றார்.
வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை அணி 20-20 உலகக் கிண்ணத்தில் முதல் சுற்றிலேயே வெளியேறிய விடயமானது இலங்கை ரசிகர்களிடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது.
நேற்று (13) நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் அணி 25 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. பங்களாதேஷ் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டி ஆரம்பத்திலேயே மழையால் தடைப்பட்ட போதிலும் பின்னர் போட்டி ஆரம்பமானது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 159 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இலங்கை அணி
160 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நெதர்லாந்து அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 134 ஓட்டங்களை மாத்திரமேபெற முடிந்தது.
அதன்படி நேற்றைய போட்டியில் பங்களாதேஷ் அணி 25 ஓட்டங்களால் வெற்றி பெற்றதன் மூலம் 20 - 20 உலகக் கிண்ணத்தின் சுப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்துள்ளது.
20-20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப சுற்றில் இலங்கை அணி வெளியேறுவது இதுவே முதல் முறையாகும்.
2014 இல் 20-20 உலக சாம்பியனாக ஆன பிறகு, அதன்பின் நடந்த எந்த ஒரு 20-20 உலகக் கோப்பை போட்டியிலும் இலங்கை அரையிறுதிக்கு கூட தகுதி பெறவில்லை.
இதேவேளை, டி20 உலகக் கிண்ண கிரிக்கட் தொடரில் ஆப்கானிஸ்தான் மற்றும் பப்புவா நியூ கினி அணிகளுக்கிடையிலான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று 8 சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை பெற்றுக்கொடுத்துள்ளது.
இதன்காரணமாக டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் சுற்றிலேயே நியூசிலாந்து அணியும் வெளியேறும் வரலாற்று பின்னடைவை சந்தித்திருந்தது.
இதுவரை இந்தியா, அவுஸ்திரலியா , ஆப்கானிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் உலக கோப்பை கிரிக்கெட்டின் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |