அரச காணியில் அமைக்கப்படும் கட்டட பணிகளை நிறுத்த கோரி மகஜர் கையளிப்பு (Photos)
மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ள மன்னார் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்படட மாந்தை கிராமத்தில் அரச காணியில் தனியார் நிதியில் அமைக்கப்பட்டு வரும் கட்டடத்தின் அபிவிருத்தி பணியை இடை நிறுத்தக்கோரி கிராம மக்கள் ஒன்றிணைந்து மன்னார் பிரதேச செயலாளரிடம் அவசர மகஜரொன்றை கையளித்துள்ளனர்.
மாந்தை மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் காலை இவ்வாறு மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மக்கள் தெரிவிக்கையில்,
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ள மாந்தை கிராமத்தில் அரச காணியில் தனியார் நிதியில் தற்போது கட்டடம் ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது. குறிப்பிட்ட நிலத்தில் 1990 ஆம் ஆண்டுக்கு முன்னர் பொது பேருந்து தரிப்பிடம் ஒன்றும் இருந்து வந்துள்ளது.
ஆனால் நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக 1990ஆம் ஆண்டுக்கு முன்னர் குறித்த பேருந்து நிலையம் முற்றாக சேதமாகிய நிலையில், தற்போது அதன் அருகில் ஒரு பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் சில தரப்பினரால் குறிப்பிட்ட காணியில் கட்டடம் ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.
குறித்த கட்டடம் தொடர்பாக நாங்கள் சிலரிடம் வினவிய போது பேருந்து நிலையம் ஒன்று அமைப்பதாக எங்களிடம் தெரிவித்தனர். ஆனால் குறித்த பகுதியில் பேருந்து நிலையம் அமைப்பது தேவை அற்றது எனக் கிராம மக்களாகிய நாங்கள் கருதுகிறோம்.
எமது கிராமத்தில் மக்கள் பொது தேவைக்கு எனக் குறிப்பாக முன்பள்ளி, மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம், சனசமூக நிலையம், சுகாதார நிலையம் ஆகியவற்றிற்குக் காணிகள் எவையும் இன்றி தவிக்கும் நிலையில் அரச காணிகளை சில தனி நபர்களுக்கு வழங்குவது தொடர்பாக நாங்கள் கண்டிக்கிறோம், மனம் வருந்துகின்றோம்.
எமது கிராமத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள பொது தேவைகள் குறித்து எமது கிராமத்தில் உள்ள சங்கங்கள் மற்றும் அமைப்புக்களினால் பல தடவைகள் கேட்கப்பட்டுள்ள போதும் தற்போது வரை காணிகள் எதுவும் வழங்கப்படவில்லை.
தற்போது குறித்த காணியில் அமைக்கப்பட்டு வரும் கட்டடம் தொடர்பான வேலைத்திட்டங்களை உடனடியாக நிறுத்துமாறு கோரியும் தற்போது வரை எவ்வித நடவடிக்கைகளும் இடம்பெறவில்லை.
குறித்த நடவடிக்கையை மாந்தை கிராம மக்களாகிய நாங்கள் பாரபட்சமாகவே கருதுகின்றோம். இவ்விடயம் குறித்து மன்னார் மாவட்ட அரச அதிபரிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
ஏற்கனவே இடம்பெற்ற முரண்பாடுகள் தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், குறித்த நடவடிக்கைகள் இடம் பெறுவது திட்டமிட்டு இடம் பெறுவதாக நாங்கள் உணர்கிறோம்.
எனவே குறித்த கிராமத்தில் பொது தேவைகள் உள்ள நிலையில் 3வது பேருந்து நிலையம் அமைக்கப்படுவதும், கட்டடம் தொடர்பாகக் கிராம அபிவிருத்திச் சங்க கூட்டத்தில், பொதுமக்கள் கூட்டத்திலும் கலந்துரையாடாமலும் எடுக்கப்படுகின்ற முடிவுகள் எமக்கு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
எனவே உரிய அதிகாரிகள் குறிப்பாக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் ஆகியோர் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு குறித்த நிர்மாணப் பணிகளை உடனடியாக நிறுத்தி, துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் எழுத்து மூலமாக மன்னார் பிரதேச செயலாளரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதன்போது குறித்த விடயம் தொடர்பாகத் துரித நடவடிக்கைகள் முன்னெடுப்பதாகப் பிரதேசச் செயலாளர் தெரிவித்தார்.
இந்த நிலையில் மக்கள் மன்னார் பிரதேச சபைக்குச் சென்று தமது கோரிக்கைகளை முன் வைத்தனர்.
எனினும் பல மணி நேரமாக மன்னார் பிரதேச சபையின் தவிசாளருக்காக மக்களாகிய
தாங்கள் காத்திருந்த போதும் தற்போது புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட
மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் மாலை வரை மன்னார் பிரதேச சபைக்கு
சமூகமளிக்கவில்லை எனவும், தாங்கள் பிறிதொரு உறுப்பினரிடம் தமது கோரிக்கை
அடங்கிய மகஜரை கையளித்ததாகவும் மக்கள் விசனம்
தெரிவித்துள்ளனர்.







