ஹஜ் புனித யாத்திரைக்காக சென்ற 550 பேர் உயிரிழப்பு
ஹஜ் புனித யாத்திரைக்காக சென்றவர்களில் அதிக வெப்பம் மற்றும் நெரிசல் காரணமாக 550 யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளதாக சவுதி அரேபிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் அதிகமானோர் எகிப்தியர்கள் எனவும், அந்நாட்டின் 323 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மெக்காவில் உள்ள மிகப்பெரிய அல்-முஐசெமில் மயான அறையில் இதுவரை 550 பேரரின் உடல்கள் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஹஜ் பயணம்
மேலும், ஜோர்தான்ன், இந்தோனேசியா, ஈரான் மற்றும் செனகல் நாடுகளைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இஸ்லாமிய மக்கள் தங்களின் வாழ்வியல் கடமைகளில் முக்கியமானதாக கருதப்படும் புனித ஹஜ் யாத்திரைக்காக ஆண்டுதோறும் சவூதி அரேபியாவின் மெக்கா மதினாவுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் நடப்பாண்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளனர். காலநிலை மாற்றத்தால் ஆண்டுக்கு 0.4 பாகை செல்சியஸ் என மக்காவில் சடங்குகள் மேற்கொள்ளப்படும் முக்கிய இடத்தில் வெப்பம் அதிகரித்து வருவதாக கடந்த மாதம் வெளியான ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த திங்கட்கிழமை அன்று மக்காவில் உள்ள அல் ஹராம் பள்ளிவாசலில் சுமார் 51 பாகை செல்சியஸ் வெப்பம் நிலவியதாக சவூதி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புனித யாத்திரை
இந்த சூழலில் புனித யாத்திரையின் போது காணாமல் போன எகிப்து மக்களை சவூதி அதிகாரிகளின் உதவியுடன் தேடி வருவதாக எகிப்து நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், யாத்திரையின் போது உயிரிழப்பு ஏற்பட்டதையும் அமைச்சகம் உறுதி செய்தது. ஆனால், உயிரிழந்த எகிப்து மக்களின் எண்ணிக்கையை வெளியிடவில்லை. யாத்திரையின் போது வெப்பத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 2,000 பேருக்கு சிகிச்சை அளித்து வருவதாக சவூதி அரசு கூறியுள்ளது.
எனினும் கடந்த ஞாயிற்றுக்கிழமைக்கு பிறகு பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை குறித்த விவரத்தை அரசு புதுப்பிக்காமல் உள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |