அடுத்தடுத்து குறிவைக்கப்பட்ட அமெரிக்க இலக்குகள்.. ஈரானின் அதிரடி அறிவிப்பு
ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான போர்நிறுத்த உடன்படிக்கை முறிவடைந்து மீண்டும் மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், மத்திய கிழக்கு முழுவதும் உச்சக்கட்ட போர்ப் பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில், குவைத்திலுள்ள அமெரிக்க இராணுவத்தின் கேம்ப் உதாரி வெடிபொருள் களஞ்சியம், அலி அல் சலேம் விமானத் தளத்திலுள்ள பேட்ரியட் அமைப்பு மற்றும் வான் கண்காணிப்பு ரேடார் ஆகியவற்றை ஈரான் இலக்கு வைத்துள்ளது.
தற்கொலைத் தாக்குதல் நடத்தும் காமிகாஸே டிரோன்கள் (Kamikaze Drones) மூலம் அவற்றின் மீது பாரிய தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஈரானிய அரச ஊடகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
குவைத்தில் உள்ள தளங்கள்..
அமெரிக்க இராணுவ முகாம்களைக் கொண்டுள்ள குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள், இந்த மாத மோதல்கள் வெடித்தது முதற்கொண்டு ஈரானின் கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றன.

குவைத்தில் உள்ள மின்சாரம் மற்றும் நீர் உற்பத்தி நிலையம், அத்துடன் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாக குவைத் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த புதிய மோதலில் அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானை பழிவாங்கும் நோக்கில் அமெரிக்கா தனது வான்வழித் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை ஈரானிய முப்படைகளால் ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு எதிராகப் செயற்பட்ட போது, இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், மற்றுமொரு வீரர் காணாமல் போயுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பணியகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.