தமிழுக்கு மிகப்பெரிய தொண்டாற்றிய ஜி.யு.போப்பின் நிறைவேறாத ஆசைகள் (Video)
தமிழுக்கு மிகப்பெரிய தொண்டாற்றிய ஆங்கில /தமிழ் மற்றும் மொழியியல் மேதை ஜி.யு.போப் தனது நண்பருக்கு எழுதி கடிதத்தில் இறுதி ஆசைகள் மூன்றினைத் தெரிவித்திருந்தார்.
1. கல்லறையில் ஒரு “தமிழ் மாணவன்” என்று எழுதுங்கள்.
2. மொழி பெயர்த்த திருக்குறள், நாலடியார் போன்ற நூல்களைக் கல்லறையில் வையுங்கள்.
3.கல்லறை கட்டுவதற்குத் தமிழர்கள் ஒரு சிறு உதவியேனும் செய்யுங்கள். என்பவைதான் அந்தக் கோரிக்கைகள்.
கனவு கண்டவரின் கல்லறை
கடந்த 28.05.2023 அன்று லண்டனிலிருந்து ஆறு நூல்களைப்படைத்த படைப்பாளி, பொறியியலாளர் திரு.எம்.ரி.செல்வராஜா அவர்களையும் அழைத்துக்கொண்டு ஒக்ஸ்போட் நகரில் Walton well Road இலிருக்கும் ஜி.யு.போப்பின் கல்லறையைக் காணச் சென்றிருந்தேன்.
அதுவொரு ஞாயிற்றுக்கிழமை ஒக்ஸ்போட் நகரத்தின் பிரதான வீதியில் காணப்படும் அந்த மயானத்துக்குள் துழைந்தோம்.
மயானத்தின் ஆரம்பத்திலேயே சுமார் எட்டாவது, ஒன்பதாவது கல்லறையாக அமரர் ஜி.யு.போப்பின் கல்லறை காணப்படுகிறது.
தனது வாழ்விலே கல்லறை பற்றிக் கனவு கண்டவரின் கல்லறை பத்தோடு பதினொன்றாகத் தனித்த அடையாளங்கள் எதுவுமின்றி இருப்பது எமக்கு வேதனையைத் தந்திற்று.
கல்லறையில் பதிய வேண்டியது அவசியம்
உலகளாவிய ரீதியிலே ஜி.யு.போப்பின் வரலாற்றைக் அறியும் போது,அவர்தம் கல்லறையில் “இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான்”என்று எழுதப்பட்டுள்ளதாகவே கற்பிதமாகிறது, அதனையே பலரும் நம்புகிறார்கள்,ஆனால் அது உண்மை இல்லை.
அங்கே அப்படி எதுவும் எழுதப்படவில்லை. அவருடைய இறுதி ஆசை இதுவரைக்கும் நிறைவேற்றப்படவேயில்லை. கல்லறை சாதாரண கல்லறையாகவே காணப்படுகிறது. தமிழ் மக்களாகிய நாங்கள் ஜி.யு.போப்பின் கல்லறையில் அவர் தம் விருப்புகளைப் பதிய வேண்டியது அவசியம் என்று நான் கருதுகிறேன்.
ஜி.யு.போப்பின் கல்லறையிலிருந்து -கல்லாறு சதீஷ்- மற்றும் எம்.ரி.செல்வராஜா. ஒக்ஸ்போட்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |