வளர்ந்து வரும் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக சிவில் சமூக முன்னெடுப்பு! சஜித் அறிவிப்பு
இலங்கையில் மக்களாட்சியையும் அடிப்படை உரிமைகளையும் சீர்குலைக்கும் வகையில் வளர்ந்து வரும் சர்வாதிகார ஆட்சியை எதிர்ப்பதற்காக, ஒரு புதிய சிவில் சமூக முன்னெடுப்பைத் தொடங்குவதாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் ஒன்றில் கருத்து வெளியிடும்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
நாங்கள் ஆரம்பித்துள்ள இந்த இயக்கம், கட்டுப்பாடுகளும் சமநிலைகளும் பேணப்படுவதை உறுதிசெய்து, ஜனநாயகக் கட்டமைப்புகளுக்கு ஒரு நீண்டகாலப் பாதுகாப்பாகச் செயல்படும்.
நாடாளுமன்றத்தின் அதிகாரத்தைக் குறைத்து நிறைவேற்று அதிகாரத்தை வலுப்படுத்தல், நீதித்துறை சுதந்திரத்தில் தலையிடுதல், இணையப் பாதுகாப்புச் சட்டங்கள் மூலம் ஊடகச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துதல், சிவில் உரிமைகளைச் சிதைப்பதற்காகப் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்துதல் போன்ற செயற்பாடுகளை தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

வரலாற்று ரீதியாக, குறிப்பாக 2015, 2019 மற்றும் 2024 தேர்தல்களில் சிவில் சமூக இயக்கங்கள் செல்வாக்கு செலுத்தியுள்ளன, ஆனால் வெற்றிகளுக்குப் பிறகு அவை பெரும்பாலும் சரிந்துவிட்டன, அல்லது காணாமல் போய்விட்டன.
இந்த புதிய முன்னெடுப்பு, தேர்தல் வெற்றிகளுக்கு அப்பாற்பட்டு, தேர்தல்களுக்குப் பின்னரும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் வகையில் மக்களுடன் ஒரு 'சமூக ஒப்பந்தத்தை' நிலைநிறுத்த வேண்டும்.
இலங்கையின் 22 மில்லியன் குடிமக்களின் ஜனநாயக அபிலாஷைகளைப் பாதுகாப்பதற்காக, இந்த இயக்கம் கொழும்பைத் தாண்டி அனைத்து ஒன்பது மாகாணங்கள் மற்றும் 25 மாவட்டங்களுக்கும் விரிவடைந்து, உள்ளூர் அதிகாரிகள் மற்றும் சமூகத்தினரை ஈடுபடுத்த வேண்டும் இந்த முன்னெடுப்பு, ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள், உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் சமத்துவமான ஆட்சிமுறை ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.
இந்த புதிய சிவில் சமூக இயக்கம், மக்கள் ஆணையை ஒருபோதும் காட்டிக்கொடுக்காது, மாறாக ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு தார்மீக உறுதிப்பாடாகச் செயல்படும்.
'மக்களின் ஆணையை வெளிப்படையாக மீறி, ஜனநாயக உரிமைகளை அழிக்கும் ஒரு அபாயகரமான சர்வாதிகார ஆட்சியை நாடு இன்று எதிர்கொள்கிறது' என்றும் எச்சரித்த சஜித் பிரேமதாச, நாடு தழுவிய சிவில் சமூக முன்னணியைக் கட்டியெழுப்புவதன் அவசரம் மற்றும் அவசியத்தை தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.