கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல - டென்மார்க் உறுதி
கிரீன்லாந்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் பிடிவாதம் காட்டி வரும் நிலையில், இது குறித்து விவாதிக்க அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ அடுத்த வாரம் டென்மார்க் அரசாங்கத்தைச் சந்திக்கவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கிரீன்லாந்தை விலைக்கு வாங்குவது அல்லது அதன் கட்டுப்பாட்டைப் பெறுவது குறித்து நீண்டகாலமாக ஆர்வம் காட்டி வரும் ட்ரம்ப், நேற்று இது குறித்துப் பேசி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.
அதிகப்படியான கனிம வளங்கள்
"கிரீன்லாந்தை அமெரிக்கக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு இராணுவ நடவடிக்கையைப் பயன்படுத்துவதும் எப்போதும் ஒரு தெரிவாகவே உள்ளது" என ட்ரம்ப் தெரிவித்தார்.

இந்த கருத்து சர்வதேச அளவில் பெரும் பரபரப்பையும், டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தினால் ஏற்பட்டுள்ள இராஜதந்திரப் பதற்றத்தைத் தணிக்கும் வகையில், டென்மார்க் வெளியுறவுத்துறை அமைச்சர் லார்ஸ் லோக் ராஸ்முசென், அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோவைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.
இந்தச் சந்திப்பிற்காக டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து அரசாங்கங்கள் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளன. இது குறித்து கிரீன்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் மோட்ஸ்ஃபெல்ட் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிடுகையில், "கிரீன்லாந்து குறித்து அமெரிக்கா விடுத்துள்ள கடுமையான அறிக்கைகள் குறித்து விவாதிப்பதே இந்த பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கம்" எனத் தெரிவித்துள்ளார்.
அதிகப்படியான கனிம வளங்கள் மற்றும் ஆர்ட்டிக் பகுதியில் உள்ள அதன் முக்கியத்துவம் வாய்ந்த புவியியல் இருப்பிடம் காரணமாக, அமெரிக்கா கிரீன்லாந்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர விரும்புகிறது. ஆனால், கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல என்பதில் டென்மார்க் உறுதியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri