உலகக்கிண்ண கிரிக்கெட்டில் இரட்டை சாதனை: அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி
2023 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலியா அணி 309 ஓட்டங்களால் அபார வெற்றிப்பெற்றுள்ளது.
மேலும் இந்த தொடரில் அதிக ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற அணி என்ற சாதனையை அவுஸ்திரேலியா படைத்துள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் அவுஸ்திரேலியா அணி வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 399 ஒட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
400 ஓட்டங்கள்
அவுஸ்திரேலியா அணி சார்பில் கிளென் மேக்ஸ்வெல் 106 ஓட்டங்களையும், டேவிட் வார்னர் 104 ஓட்டங்களையும், ஸ்டீவன் ஸ்மித் 71 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் நெதர்லாந்து அணி சார்பில் லோகன் வான் பீக் அதிகபட்சமாக 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதன் பின்னர் 400 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 21 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 90 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.
நெதர்லாந்து அணி சார்பில் விக்ரம்ஜித் சிங் அதிகபட்சமாக 25 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்து வீச்சில் அவுஸ்திரேலியா அணி சார்பில் அடம் சம்பா 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
உலக சாதனை
இன்றையப் போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் கிளென் மேக்ஸ்வெல் சாதனை ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அதன்படி, அவர் 8 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் அடங்கலாக மொத்தமாக 40 பந்துகளை எதிர்கொண்டு சதம் கடந்தார்.
இதன் மூலம் மேக்ஸ்வெல் ஒருநாள் உலகக் கிண்ண அரங்கில் வேகமாக சதம் விளாசிய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
முன்னதாக தென்னாப்பிரிக்க வீரர் ஐடன் மர்க்கரம் இலங்கையுடனான நடப்பு உலகக் கிண்ண போட்டியில் 49 பந்துகளில் சதம் விளாசியிருந்தார்.
இந்தநிலையில் இன்றைய ஆட்டத்தில் மொத்தமாக 43 பந்துகளை எதிர்கொண்ட மேக்ஸ்வெல் 106 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.