சிங்கள குடியேற்றத்துக்கு எதிராக மாபெரும் போராட்டம்
புதிய இணைப்பு
வவுனியா மாவட்டத்தின் இனப்பரம்பலை மாற்ற எடுக்கும் முயற்சிக்கெதிராக வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று (15) மாபெரும் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதில் பல புலனாய்வாளர்கள் தமது தொலைபேசியினாலும், புகைப்படக் கருவியினாலும் போராட்டம் நடாத்தியவர்களைப் புகைப்படம் பிடித்ததுடன், ஊடகவியலாளர்களையும் சுற்றி புகைப்படம் பிடித்துள்ளனர்.
இதனால் அப்பகுதி மக்கள் ஒரு அச்ச நிலையில் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்ததோடு புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல் தற்போதும் குறையவில்லை என போராட்டக்காரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
திட்டமிட்ட குடியேற்றத்திற்கு எதிரான மக்கள் போராட்டக்குழு மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளின் ஏற்பாட்டில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
வவுனியா மாவட்டத்தின் இனப்பரம்பலை மாற்ற எடுக்கும் முயற்சிக்கெதிராக வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக மாபெரும் போராட்டம் இடம்பெற்றுள்ளது.
திட்டமிட்ட குடியேற்றத்திற்கு எதிரான மக்கள் போராட்டக்குழு மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளின் ஏற்பாட்டில் இன்று (15) காலை குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், எங்கள் நிலம் எமக்கு வேண்டும், தொல்பொருட் திணைக்களமே வரலாற்றை திரிபுபடுத்தாதே, அதிகார இனவெறியைத் தமிழர்கள்மீது காட்டாதே, சிங்கள குடியேற்றத்தை நிறுத்து போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.
இதேவேளை ஜனாதிபதிக்கு அனுப்பும் நிமித்தம் வவுனியா வடக்கு பிரதேச செயலாளருக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற
உறுப்பினர்களான வினோ நோகராதலிங்கம், சி.சிறிதரன், முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, பிரதேச சபை
தலைவர்களான ச.தணிகாசலம், யோகராசா, நகரசபை தலைவர் இ.கௌதமன், புதிய ஜனநாயக
மாக்சிச லெனினிசகட்சியின் நி.பிரதீபன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான
ஜி.ரி.லிங்கநாதன், செ.மயூரன், ம.தியாகராஜா உட்பட அரசியல் பிரமுகர்கள்
பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.










