முல்லைத்தீவில் மாவீரர் நாளை குழப்பும் நடவடிக்கை! பொலிஸாருடன் விசேட கலந்துரையாடல் (Video)
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள பல மாவீரர் துயிலும் இல்லங்களின் மாவீரர் நாள் எழுச்சி செயற்பாடுகளை குழப்பும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருவதாக ஏற்பாட்டாளர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் முல்லைத்தீவு சிரேஸ்ட பொலிஸ் மா அதிபருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,
மலரஞ்சலி செலுத்தல்
“மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியகட்சரையும் முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் அத்தியகட்சரையும் நேரில் சென்று சந்தித்து நீதி மன்ற உத்தரவு தொடர்பாக நேற்றைய தினம் பல்வேறு துயிலும் இல்லங்களில் பொலிஸாரால் அச்சுறுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தொடர்பில் வினவினேன்.
முல்லைத்தீவை பொறுத்தமட்டில் கொடியே கட்ட வேண்டாம் என அச்சுறுத்தப்பட்டுள்ளது. துயிலும் இல்லங்கள் தொடர்பாக அங்கிருந்த பணிக்குழு உறுப்பினர்கள் எனக்கு தொலைபேசியுடாக தெரிவித்திருந்தனர்.
இதனடிப்படையில் அத்தியட்சகர்களை சந்தித்து விடுதலை புலிகளின் சீருடையோ கொடிகளோ நாம் பயன்படுத்துவதில்லை. ஆனால் கொடிகட்டி தீபமேந்தி மலரஞ்சலி செலுத்த நீதிமன்றம் தடை விதிக்கவில்லை.
பொலிஸார் துயிலும் இல்லங்களில் தொடர்ச்சியாக அச்சுறுத்துவதை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டேன். மக்களுக்கு இடையூறு விளைவிக்காதவாறு நடந்து கொள்ளுமாறு கேட்ட போது பொலிஸார் இது தொடர்பில் பரிசீலனை செய்வதாகவும் தெரிவித்துள்ளனர்" என கூறியுள்ளார்.
மக்கள், பொலிஸார் மற்றும் இராணுவத்தின் கெடுபிடியை நாடாளுமன்ற உறுப்பினறுக்கு தெரிவித்ததையடுத்தே குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










