பட்டதாரிகளுக்கு ஏனைய மொழி அறிவு அவசியம்! ஏறாவூர் நகர சபையின் தவிசாளர்
உள்வாரி வெளிவாரிப் பட்டதாரிகளாக வெளியேறி நியமனம் பெற்று அலுவலகங்களில் கடமை புரியும் பட்டதாரிகளுக்கு ஏனைய மொழிகள் தெரியாத நிலைமை உள்ளது. இது மிகவும் பின்னடைவான நிலைமை என ஏறாவூர் நகர சபையின் தவிசாளர் எம்.எஸ். நழிம் தெரிவித்தார்.
ஏறாவூர் பாத்திமா மகளிர் நூலகத்தில் ஏறாவூர் நகர சபைத் தலைவரின் நிதிப் பங்களிப்போடு தொடக்கி வைக்கப்பட்ட எதிர்கால சவால்களை எதிர்கொள்ளக் கூடிய மும்மொழிகளிலும் தேர்ச்சி பெற்ற மாணவர்களை உருவாக்குதல் எனும் திட்டத்தின் கீழ் வகுப்புக்கள் ஆரம்பிப்பு நிகழ்வு செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
நிகழ்வில் கலந்துக்கொண்டு அங்கு தொடர்ந்து உரையாற்றிய போதே இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
மொழி அறிவு அவசியம்
சிங்கள ஆங்கில மொழிகளைக் கற்று தேவையானபோது அதனூடாகவும் தொடர்பாடல்களை மேற்கொள்கின்ற சந்தர்ப்பத்தில் கடமைகளை சிறப்பாகச் செய்ய முடியும்.
அடிமட்ட ஊழியர் உத்தியோகத்தரிலிருந்து உயர்மட்ட அதிகாரிகள் வரை அவர்களுக்கு அரசு, அரச கரும மொழிகளை இலவசமாகக் கற்றுக் கொடுக்கிறது. இலங்கையில் வாழும் தமிழ் பேசுவோருக்கு சிங்களமும் ஆங்கிலமும் அவசியமாகும். அதனால் இந்த மொழி அறிவை இளம் பராயத்திலிருந்தே ஊட்ட வேண்டும்.
தாய்மொழி தமிழை நாம் எவ்வாறு அக்கறையோடு கற்கின்றோமோ அதேபோலத்தான் ஏனைய சகோதர மொழியான சிங்களத்தையும் சர்வதேச மொழியான ஆங்கிலத்தையும் நாம் சிறப்பாகக் கற்றுக் கொள்ள வேண்டும்.
இளமையிற் கல்வி சிலையில் எழுத்து என்பதுபோல இளமையில் கற்கக் கூடிய கல்வி மனதில் இலகுவாகப் பதியக் கூடியது. ஆகையினால் சிறார்களுக்கு இளம் பராயத்திலிருந்தே மொழியறிவை வளர்க்க வேண்டும் என்றார்.
இந்நிகழ்வில் ஏறாவூர் நகர சபையின் செயலாளர் எம்.எச்.எம். ஹமீம், ஆங்கில சிங்கள மொழிப் போதனாசியர்களான சமூர்த்தி அலுவலர் ஐ. றஹீம் தென்னைப் பயிர்ச் செய்கை ஆய்வு கூடப் பொறுப்பாளர் எம்.யூ. ஜாஹிறா ஆகியோருட்பட இன்னும் பல அலுவலர்களும் நலன் விரும்பிகளும் பெற்றோரும் கலந்து கொண்டனர்.




