கொழும்பு கோட்டையில் பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த பட்டதாரிகள்
பாடசாலைகளில் ஆசிரிய அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இணைக்கப்பட்டுள்ள பல ஆயிரம் பட்டதாரிகள் நாட்டின் தலைநகரில் கூடி தங்களது சார்பான நியாயங்களை முன்வைத்து பாரிய ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பட்டதாரி ஒன்றியம் இன்று குறித்த ஆர்ப்பாட்டத்தை இன்று முன்னெடுத்துள்ளது.
நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் இணைப்பு செய்யப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கவேண்டும் என்றும் அத்தோடு அவர்களை ஏனைய திணைக்களங்களுக்குள் இடமாற்றக்கூடாது எனும் பல கோரிக்கைகள் இதன்போது முன்வைக்கப்பட்டன.
நாடளாவிய ரீதியில் இருபதாயிரத்துக்கு மேற்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆசிரியர்களாக பாடசாலைகளில் கடமையாற்றி வருகின்ற நிலையில் அவர்களை ஆசிரியர் சேவைக்குள் கொண்டுவர கல்வி அமைச்சர் உள்ளிட்ட பலர் வாக்குறுதிகளுடன் கூடிய முன்னகர்வுகளை முன்னெடுத்தாலும் அது இன்றளவும் நிறைவேற்றப்படாததால் விரக்தியடைந்த பட்டதாரிகளே இறுதியில் வீதிக்கு இறங்கியுள்ளனர்.
போராட்டத்தின்போது அப்பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததுடன் இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |