நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் செய்தித்தாளில் தவறான செய்தி: அரசாங்கத்தின் எச்சரிக்கை
அரசாங்கத்தின் 'தூய்மையான இலங்கை' தேசிய திட்டம் தொடர்பாக அண்மையில் வெளியிடப்பட்ட தவறான செய்தி அறிக்கைகள் தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்குச் சொந்தமான உள்ளூர் செய்தித்தாள் ஒன்றுக்கு அரசாங்கத்திடமிருந்து கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஊடகங்களுக்கு மத்தியில் உரையாற்றிய அரசாங்க பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayatissa), நெறிமுறையற்ற ஊடக நடைமுறைகள் அனுமதிக்கப்படாது என்று கூறியுள்ளார்.
சுத்தமான இலங்கை
கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் அதே வேளையில், இதுபோன்ற தொடர்ச்சியான நெறிமுறையற்ற ஊடக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசாங்கத்திற்கு அதிகாரம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தவறான செய்திகளை வெளியிடும் ஊடகங்களுக்கு எதிராக பொதுமக்கள் முறைப்பாடுகளை செய்ய உரிமை உண்டு என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் 'சுத்தமான இலங்கை' திட்டம் தொடர்பில் குறித்த செய்தித்தாள் அண்மையில் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.
அதில் இந்தத் திட்டத்தின் கீழ் தெரு வியாபாரிகள் வணிகம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அரசாங்கத்தின் திட்டம்
இது, கொழும்பின் புறநகர் பனாகொட பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தி வந்த தெரு வணிகத்துடன் தொடர்புப்படுத்தி புனையப்பட்டுள்ளதாக அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசாங்கத்தின் திட்டம் தெரு வியாபாரிகளைத் தண்டிக்கப் பயன்படுத்தப்படுகிறது என்ற கருத்தை கூறி பொதுமக்களை தவறாக வழிநடத்த இந்த செய்தித்தாள் முயற்சித்துள்ளதாகவும் அமைச்சர் ஜெயதிஸ்ஸ கூறியுள்ளார்.
எனவே இதுபோன்ற செய்திகள் பரவுவதை அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என்றும், அதற்குப் பொறுப்பான ஊடக நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ எச்சரித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |