கொரோனாவை கட்டுப்படுத்திய அரசுக்கு பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும்
கொரோனாவை கட்டுப்படுத்திய அரசாங்கம், பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranathunga) தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாக மினுவங்கொடை கிராம குழுக்களின் பிரதிநிதிகளுக்கு விளக்குவதற்காக உடுகம்பெலவில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
மக்கள் எதிர்பார்த்த மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் தயாராகும் போது, எதிர்க்கட்சியின் தூண்டுதல் காரணமாக மக்களை அதனை எதிர்க்கின்றனர். கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்றிய அரசாங்கத்திற்கு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது சிக்கலாக இருக்காது.
2015 ஆம் ஆண்டு மாற்றத்திற்காக மக்கள் வாக்களித்தனர்.எனினும் அந்த மாற்றம் நிகழவில்லை. இதனால், நாட்டு மக்கள் 2019 ஆம் ஆண்டு மீண்டும் மாற்றத்தை ஏற்படுத்த தீர்மானித்தனர்.
இதனால், உண்மையாக மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக மக்கள் கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களித்தனர். தற்போது அந்த மாற்றத்தை செய்ய நாங்கள் முயற்சித்து வருகின்றோம்.
எனினும் நாட்டு மக்கள் மாற்றத்தை ஏற்படுத்த தயாராக இருக்கின்றனரா என்ற கேள்வி எமக்கு இருக்கின்றது. மாற்றத்தை ஏற்படுத்த முயற்சித்தன் காரணமாக அரசாங்கம் மக்களால் விமர்சிக்கப்படுகின்றது.
பசளை பிரச்சினையும் அது போன்ற ஒன்று. மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் போது மக்கள் அச்சப்படுகின்றனர். மக்கள் விஷத்தன்மை கொண்ட உணவை சாப்பிடுவதை தடுப்பதற்காக சேதனப் பசளையை அறிமுகப்படுத்த முயற்சித்தோம்.
ஜனாதிபதி மற்றும் கமத்தொழில் அமைச்சரின் புகைப்படங்களை எரிப்பதால், இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது. மாற்றத்தை எதிர்பார்த்தால், அந்த மாற்றத்தை மேற்கொள்ள அரசாங்கத்திற்கு காலத்தை வழங்க வேண்டும் எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.