மக்கள் ஆதரவு இருந்தால் அடக்குமுறைச் சட்டங்கள் எதற்கு!
மக்களின் ஆதரவு வீழ்ச்சி அடைந்துள்ளது என்பதை இந்த அரசாங்கம் தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், மக்கள் ஆணை பற்றியும் 'மக்களின் அரசாங்கம்' என்றும் மேடைகளில் பேசி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக, அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் இந்த அரசாங்கம் மக்கள் நலனை முன்னிலைப்படுத்திய அரசாங்கம் என மார்தட்டிக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான ஒரு பின்னணியில், ஏன் அரசாங்கம் அடக்குமுறைச் சட்டங்களைக் கையில் எடுக்கின்றது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களின் ஆதரவு இருக்கிறது என்றால், மக்களுக்கு எதிராக அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை அல்லவா? எனவும் அவர் வினவியுள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராக வேறு தரப்புக்கள் ஏதேனும் சூழ்ச்சிகள் செய்யப்பட்டால், அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்கு மக்கள் வீதியில் இறங்கிப் போராடுவார்கள் அல்லவா எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டு வருவதன் மூலம், தமக்கான மக்கள் ஆதரவு வீழ்ச்சி அடைந்துள்ளதை அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, அரசாங்கத்திற்கு எதிராக எழும் குரல்களை அடக்குவதற்காகவே இந்த அடக்குமுறைச் சட்டங்களை அரசாங்கம் கையில் எடுக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மேலும் தெரிவித்துள்ளார்.