இளைஞர் சேவை விவகாரத்தில் அரசாங்கத்தின் பாரபட்சம் - மனோகணேசன்
மலையக பெருந்தோட்ட பகுதிகளில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றங்களை அமைப்பதில் அரசாங்கம் பாரபட்சம் காட்ட கூடாது என தழிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், "தேசிய இளைஞர் சேவை மன்றங்கள் அமைப்பது தொடர்பான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதில் அரசியல் சாயம் பூசப்பட்டுள்ளது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இலாஞ்சனையை மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறு அதனை மாற்றுவதாக இருந்தால் அதனை உடனடியாக இடைநிறுத்துமாறு இது தொடர்பான அமைச்சருக்கு நான் கோரிக்கை விடுக்கிறேன்.
தேசிய இளைஞர் சேவை
தேசிய இளைஞர் சேவை மன்றங்களுக்குள் அரசியலை புகுத்த வேண்டாம் மலையகம் மற்றும் கொழும்பு பிரதேசத்திலும் ஒரு கிராம சேவகர் பிரிவிற்கு ஒரு இளைஞர் கழகத்தை மாத்திரம் பதிவு செய்யமுடியுமென வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
சில கிராமசேவகர் பிரிவுகளில் அதிகமான மக்கள் காணப்படுகிறார்கள். பெருந்தோட்ட பகுதிகளில் நுவரெலியா மாவட்டத்தை பொருத்தவரையில் உள்ள கிராமசேவகர் பிரிவுகளில் பத்தாயிரம் தொடக்கம் இருபதாயிரம் வரையிலான சனத்தொகை காணப்படுகிறது.
மக்கள் குறைந்து வாழுகின்ற பகுதிகளிலும் கூடுதலான மக்கள் வாழும் பகுதிகளிலும் எவ்வாறு ஒரு இளைஞர் கழகங்களை பதிவு செய்யவேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது இங்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமைச்சர் நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும். மலையக பெருந்தோட்ட பகுதிகளில் ஒரு தோட்டப்பகுதிக்கு ஒரு கழகத்தை அமைக்க வேண்டும் இதில் அரசியலை உட்புகுத்த வேண்டாம் இது ஜே.வி. பியின் இளைஞர் கழகம் அல்ல இது அரசாங்கத்தோடு இணைந்து செயற்படும் வேலைத்திட்டங்கள்.
அமைக்கப்படுகின்ற கழகங்கள் ஊடாக பயிற்சிகள் உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. கலாசாரம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுகிறன. இது போன்ற வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் உள்ளது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றங்களை உருவாக்கியது ஜே.வி.பி.அல்ல ரணில் விக்ரமசிங்க தான் இதனை உருவாக்கினார்” என குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



