மாகாண சபை முறைமையை நீக்கும் எண்ணம் இல்லை: அநுர தரப்பு விளக்கம்
மாகாண சபை முறைமையை நீக்கும் எண்ணம் தேசிய மக்கள் சக்திக்கு இல்லை என வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று (02.12.2024) இடம்பெற்ற அனர்த்த முகாமைத்துவக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“1978 அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக ரில்வின் சில்வா கருத்துத் தெரிவித்துள்ளார். அதாவது இந்த அரசமைப்பை மாற்ற வேண்டிய தேவை இருக்கின்றது என்று அவர் கூறியுள்ளார்.
புதிய அரசியல் யாப்பு
மாகாண சபை முறைமையை நீக்குவதற்கான மக்கள் ஆணை எதுவும் பெறப்படவில்லை. இதனைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். அவர் அதில் குறிப்பிட்ட விடயம் இந்த மாகாண சபை அலகு போதியதல்ல.
எனவே, இந்த விடயத்தில் ஒரு தீர்வை நோக்கிப் போக வேண்டும். அது மாத்திரமல்ல, புதிய அரசியல் யாப்பை முன்வைக்கும்போது 13ஆம் திருத்தச் சட்டம் அல்ல முதலாவது திருத்தம் தொடக்கம் 20 வரையிலான திருத்தங்கள் மாற்றப்பட்டு ஒரு புதிய அரசியல் அமைப்பு முன்வைக்கப்படவுள்ளது.
இந்த விடயம் பிழையாகப் புரிந்துகொள்ளப்பட்ட விடயமாக நாங்கள் பார்க்கின்றோம். ஆகவே, தேசிய மக்கள் சக்தியால் மாகாண சபை முறைமையை நீக்குவதற்கான மக்கள் ஆணை எதுவும் பெறப்படவில்லை. அதற்கான முயற்சியில் தேசிய மக்கள் சக்தி ஈடுபடவும் இல்லை.
ஆனால், மாகாண சபையையும் விட ஒரு வலிமையான சபை, அனைத்து மக்களுக்கும் சமனான அந்தஸ்தை வழங்கக்கூடிய கூடிய ஓர் அரசமைப்பு தேவை. அதில் மாகாண சபை இருக்குமா, இல்லையா என்பதே விடயம். எனவே, இதுவரையும் மாகாண சபையை நீக்குவதற்கான எந்தவிதமான முன்மொழிவுகளும் முன்வைக்கப்படவில்லை” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |