இந்த அரசாங்கம் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கவில்லை
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டு ஓராண்டு காலம் பூர்த்தியான நிலையில் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டிராச்சி இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
ஆட்சி பொறுப்பை ஏற்றுக்கொண்டு ஓராண்டு காலம் கடந்துள்ள போதிலும் வேலை வாய்ப்பு பிரச்சினை ,பொருளாதார பிரச்சினை, இளைஞர் யுவதிகளின் பிரச்சனைகள் போன்றன இன்னமும் தீர்க்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.
அபிவிருத்தி திட்டங்கள் கிராமங்களை நோக்கி செல்ல வேண்டும் எனவும் அவ்வாறு சென்றாலே கிராமிய மக்களின் கைகளுக்கு பணம் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தில் குறிப்பாக பசில் ராஜபக்சவின் திட்டங்களின் மூலம் கிராமிய மக்களுக்கு நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தி திட்டங்களின் மூலம் கிராமிய மட்டத்திலிருந்து பல்வேறு கட்டங்களில் பணம் களவாடப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிராமிய மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க குறிப்பிடுகின்றார்.
அந்த கருத்து வரவேற்கப்பட வேண்டியது என திஸ்ஸ குட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
பிணையில்லாமல் கடன் வழங்கப்படும் என வழங்கப்பட்ட வாக்குறுதி அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.




