கடந்த நல்லாட்சி காலத்தின் கொள்கைகளை இந்த அரசாங்கமும் நடைமுறைப்படுத்துகிறது - சட்டத்தரணி குகதாசன் ஐங்கரன்
தன்னார்வு தொண்டு நிறுவனங்களையும், அரச சார்பற்ற நிறுவனங்களையும் ஒழுங்குபடுத்த வேண்டும் என்ற அடிப்படையிலான அரசின் செயற்பாடுகள் பாரதூரமான விளைவுகளை தோற்றுவிப்பதாகவே தெரிகின்றதென சட்டத்தரணி குகதாசன் ஐங்கரன் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம்(02.08.2026) மட்டக்களப்பு கல்லடியிலுள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த நல்லாட்சி அரசாங்கம்
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த விடயம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட விடயம் அல்ல. இதனை விளங்கிக்கொள்ள வேண்டும்.
சமீபகாலமாக இதனை நாம் பார்க்கின்றபோது கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் 2018 ஆம் ஆண்டில் இது முதன் முதலாக பேசப்பட்டது.

அப்போது அந்த அரசாங்கத்தால் இது சம்பந்தமான வரைபு ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அந்த வரைபிலே இருந்த சில விடயங்கள் தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் மீது அரசியல் தலையீடுகளை கொண்டுவரும் என்ற அடிப்படையில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தன.
அதற்காக ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், அரசு சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் மனித உரிமை சார்ந்த நிறுவனங்கள் போன்ற அமைப்புகள் எல்லாம் எதிர்ப்பு வெளியிட்டிருந்தன. இந்த நிலையில்தான் அந்த வரைபு சட்டமாக்கப்படுகின்ற முயற்சி கைவிடப்பட்டிருந்தது.

பின்னர் நல்லாட்சி அரசாங்கத்தின் இறுதி காலப்பகுதியில் ஏற்பட்ட அரசியல் நிலைமை காரணமாக இந்தச் சட்டத்தை முன்னெடுப்பதில் உரிய காலம் அவர்களுக்கு இல்லாததன் காரணமாக அது கைவிடப்பட்டிருந்தது என குறிப்பிட்டுள்ளார்.