எரிபொருள் விலைகளை உடனடியாக உயர்த்துக! பசிலுக்கு அனுப்பட்டுள்ள அவசர கடிதம்
எரிபொருள்களில் விலைகளை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் (Ajith Nivard Cabraal), நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு (Basil Rajapaksa) கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் ஆளுநர் கடந்த 10 ஆம் திகதி கடிதம் மூலம் இதனை கூறியுள்ளார்.
இலங்கை எதிர்நோக்கி இருக்கும் பொருளாதார நெருக்கடி நிலைமையில், எரிபொருளை இறக்குமதி செய்ய டொலர்களை பயன்படுத்தினால், அந்நிய செலாவணி இன்றி நாடு மிகப் பெரிய நெருக்கடிக்கு உள்ளாகும் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கமைய பெட்ரோலின் விலையை 35 ரூபாவாலும் டீசல் விலையை 24 ரூபாவாலும் மண் எண்ணெயை 11 ரூபாவாலும் உடனடியாக அதிகரித்து எரிபொருளுக்கான கேள்வியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கப்ரால் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும் இந்த கடிதம் சம்பந்தமாக நிதியமைச்சு இதுவரை எவ்வித பதில்களையும் வழங்கவில்லை.
இதனிடையே எரிபொருள் தேவைக்காக போதுமான அளவில் எரிபொருளை இறக்குமதி செய்ய டொலர் விடுவிக்கப்படவில்லை என்பதுடன் வங்கிகள் அதற்கான கடன் பத்திரங்களையும் வெளியிடவில்லை எனக் கூறப்படுகிறது.