இலங்கை அரசாங்கம் இழைத்த தவறு! பகிரங்கமாக ஒப்புக்கொண்ட அமைச்சர்
பொருளாதார நெருக்கடிக்கு பொருளாதார தீர்வு அன்றி அரசியல் தீர்வு முக்கியமாகாதென அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தின் இறுதிநாளான நேற்று உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்,
அந்நிய செலாவணி கட்டுப்பாட்டுச் சட்டம் முன்னாள் ஜனாதிபதி ஸ்ரீ மாவோ பண்டாரநாயக்கவின் காலத்தில் கடுமையாக செயற்படுத்தப்பட்டது.
இலங்கை அரசாங்கம் இழைத்த தவறு
சூதாட்டம் உள்ளிட்ட விடயங்களுக்கு எதிராக வெளிநாட்டு அந்நிய செலாவணி குற்ற நியாயாதிக்க ஆணைக் குழு நியமிக்கப்பட்டு ஹைட்ராமணி போன்ற வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
2017 ஆம் ஆண்டு மத்திய வங்கியின் ஆளுநராக குமாரசுவாமி செயற்பட்டதுடன் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் அந்நிய செலாவணி கட்டுப்பாட்டு சட்டத்தை அவர் தளர்த்தினார்.
அந்த சந்தர்ப்பத்தில் ரவி கருணாநாயக்கவே நிதி அமைச்சராக செயற்பட்டார். அப்போது கட்டுப்பாடு என்ற சொல்லை இதில் உள்ளடக்க முடியாதென அவர் என்னோடு வாதிட்டார்.
இத்தகைய தவறை மேற்கொள்ள வேண்டாமென நான் பல தடவைகள் அவர்களுக்கு வலியுறுத்தினேன். அவ்வாறு நடந்தால் வரப்பை உடைந்தது போல அந்நிய செலாவணி நாட்டிலிருந்து வெளியே செல்லும் என்றும் அறிவுறுத்தினேன்.
கடந்த வருடம் சீனாவின் ஏற்றுமதி வருமானம் 3,363 பில்லியன் டொலராகும். அத்துடன் 181 பில்லியன் டொலர் வெளிநாட்டு முதலீடு சீனாவுக்கு கிடைத்துள்ளது. அதேபோன்று இந்தியாவின் ஏற்றுமதி வருமானம் 395.4 பில்லியன் டொலராகும்.
வெளிநாட்டு முதலீடு 44. 7 பில்லியன் டொலராகும். எமது நாட்டின் இந்த வருட ஏற்றுமதி வருமானம் 12. 5 பில்லியன் டொலராகும். வெளிநாட்டு முதலீடு 0.6 பில்லியன் மட்டுமே.
நாம் தவறிழைத்துள்ளமை இதன் மூலம் தெரிகிறது. எமது முதலீட்டாளர்கள் ஏன் வெளிநாடு செல்கின்றார்கள் என்பது புரிகிறது. இந்த பிரச்சினைக்கு நாம் அனைவரும் இணைந்து தீர்வு காண வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.