பொதுநல மீன்வளர்ப்பு திட்டத்தை ஆரம்பிக்க ஆளுநரின் கருத்தையும் மீறி முட்டுக்கட்டை
மக்களுக்கு நன்மை பயக்கும் பொதுநல மீன்வளர்ப்பு திட்டத்தை சிலர் தமது தனிப்பட்ட பிரச்சினையால் எதிர்ப்பதாகவும், அந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் ஊர்காவற்துறை - பருத்தியடைப்பு கிராமமானது வளர்ச்சியுறும் என அந்த பகுதி மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அந்த திட்டம் தொடர்பான கூட்டமானது நேற்று(12.08.2026) ஊர்காவற்துறை பிரதேச செயலாளர் தலைமையில், பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
மீன்வளர்ப்பு திட்டம்
இதில் ஊர்காவற்துறை பிரதேச சபையின் தவிசாளர், நக்டா நிறுவனத்தினர், சுற்றுச்சூழல் அதிகாரசபையினர், நீரியல் வள திணைக்களத்தினர், ஊர்காவற்துறை பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர், பருத்தியடைப்பு கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
இருப்பினும் நேற்றைய கூட்டத்திலும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான தீர்க்கமான முடிவு எட்டப்படவில்லை. இது குறித்து மக்கள் கருத்து தெரிவிக்கையில்,

பொதுநல மீன்வளர்ப்பு திட்டம் தொடர்பான பிரச்சினை இரண்டரை வருட காலமாக இடம்பெறுகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்க்கமான முடிவு இதுவரைக்கும் எடுக்கப்படவில்லை.
இதுவரைக்கும் 15 கூட்டங்கள் இது குறித்து இடம்பெற்றுள்ளன. கடந்த ஆண்டு ஆளுநரின் பங்கேற்புடனும் இது தொடர்பான கூட்டம் இடம்பெற்றது.
இதன்போது ஆளுநர், இந்த திட்டம் தொடர்பான விளக்கத்தை சரியான விதத்தில் மக்களிடம் சமர்ப்பிக்குமாறு ஆளுநர் திணைக்களங்களுக்கு உத்தரவிட்டார்.
சுற்று நிருபம்
ஆனால் இதுவரை எமது கிராமத்தில் இந்தத் திட்டம் குறித்து மக்களுக்கு விளக்கமளிப்பது தொடர்பான கூட்டம் இடம்பெறவில்லை. 2024 ஆம் ஆண்டு 6ஆம் மாதம் மீன்களை கடலிலேயே வளர்ப்பது தொடர்பான சுற்று நிருபம் எமக்கு கிடைக்கப்பெற்றது.
தற்போது அதனை மாற்றி தரையில் மீன்களை வளர்க்க திட்டமிடப்பட்டது. தற்போது பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், எதிர்வரும் 27ஆம் திகதி பொதுக்கூட்டம் ஒன்றினை எமது ஊரில் நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர்.

இந்த கூட்டத்தினை ஒன்றரை வருடத்திற்கு முன்னரே நடத்தி இந்த திட்டத்தினை ஆரம்பித்திருக்கலாம். இந்த திட்டம் ஒரு சிறந்த திட்டம் என நாங்கள் கருதுகின்றோம்.
இந்தத் திட்டத்தினை செய்வதால் எமது ஊரில் வீதி அமைக்கப்படும், மின்சார வசதி கிடைக்கும். மேலும் கட்டட வசதிகளும் கிடைக்கின்றன.
200 வருடங்களாக காடாக இருக்கின்ற இடத்தையே நாங்கள் கேட்கின்றோம். தங்களுக்குள் இருக்கின்ற முரண்பாட்டினாலேயே இந்த திட்டத்தினை தடுக்கின்றனர். இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் எனது ஊரில் முன்னேற்றம் ஏற்படும் என குறிப்பிட்டுள்ளனர்.