அரச ஊழியர்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு வழங்கப்பட்டது அனுமதி
ஓய்வூதியம் பெறும் அரச ஊழியர்களுக்கு உள்நாட்டில் சம்பளமற்ற விடுமுறை வழங்குவது தொடர்பான யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சம்பளமற்ற விடுமுறை
ஓய்வூதியம் பெறும் அரச ஊழியர்களுக்கு பணிமூப்பு பாதிப்பு ஏற்படாத வகையில் அதிகபட்சமாக 5 வருடங்களுக்கு உட்பட்ட சம்பளமற்ற விடுமுறையை உள்ளூரிலேயே வழங்குவது தொடர்பான சிபாரிசுகளை வழங்குவதற்கு சிரேஷ்ட அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, சம்பந்தப்பட்ட குழுக்கள் சில பரிந்துரைகளை முன்வைத்திருந்தன.
இந்த நிலையில் குறித்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
குழு நியமனம்
இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் மற்றுமொரு முன்மொழிவான அரச நிறுவனங்களில் உள்ள பயன்படுத்த முடியாத (கழிவு) பொருட்கள் அகற்றுவதை உறுதி செய்வதற்கான குழு நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரச நிறுவனங்களில் குவிந்துள்ள பயன்படுத்த முடியாத (கழிவு) பொருட்களை (Scrap Material) அகற்றுவதை துரிதப்படுத்த ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க குழுவொன்றை நியமித்துள்ளார்.
பயன்படுத்த முடியாத (கழிவு) பொருட்களை அகற்றும் முழு செயல்முறையையும் மேற்பார்வையிட்டு நடைமுறைப்படுத்துவதற்கு இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட 2022 இடைக்கால வரவு செலவுத் திட்ட முன்மொழிவுக்கமைய இந்த செயல்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
திறைசேரியின், கொம்ப்ரோலர் ஜெனரல் அலுவலகத்தின், கொம்ப்ரோலர் ஜெனரல் ரம்யா காந்தியின் தலைமையில், இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக, திறைசேரியின், அரச நிதித் திணைக்கள, மேலதிக பணிப்பாளர் நாயகம் எஸ்.யு. சந்திரகுமாரன் மற்றும் திறைசேரியின், அரசுடமை நிறுவனத் திணைக்கள, மேலதிக பணிப்பாளர் நாயகம் ஜே.எம்.எஸ்.என். ஜயசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பயன்படுத்த முடியாத (கழிவு) பொருட்களை உரிய நேரத்தில் அகற்றாததால் அரசாங்கத்துக்கு கணிசமான வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
மேலும், இதுபோன்ற பொருட்களால், அலுவலக வளாகங்கள் மற்றும் அரச கட்டடங்களில் உள்ள இடவசதி குறைந்துள்ளது.
எனவே குறித்த பொருட்களை உடனடியாகவும் முறையாகவும் அப்புறப்படுத்துமாறு ஜனாதிபதியின் செயலாளர் இந்தக் குழுவிற்கு அறிவித்துள்ளார்.
வழிமுறைகள் தொடர்பான அறிவுறுத்தல்
பின்வரும் வழிமுறையைப் பின்பற்றி பயன்படுத்த முடியாத (கழிவு) பொருட்களை அகற்றும் நடைமுறையை நிறைவு செய்யுமாறு குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- அனைத்து நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தல் வழங்குதல்.
- நிறுவனங்களினால் (அமைச்சுகள்/ திணைக்களங்கள்/ நிறுவனங்கள்) குவிந்துள்ள பயன்படுத்த முடியாத (கழிவுப்) பொருட்களை அடையாளம் காணுதல்.
- நிறுவனங்களினால், அகற்றப்பட வேண்டிய பொருட்களின் பட்டியலைத் தயாரித்தல். • ஒவ்வொரு நிறுவனமும் குறித்த மதிப்பீட்டு சபையொன்றை நியமித்தல்.
- ஒவ்வொரு நிறுவனத்திலிருந்தும் அகற்றப்பட வேண்டிய பொருட்கள் தொடர்பில் மதிப்பிடப்பட்ட அளவுகளின் பட்டியல்களைப் பெறுதல்.
- அகற்றல் செயல்முறையை கண்காணித்தல்.
- விற்பனைக்குப் பிறகு பொருட்கள் அகற்றுவதை உறுதி செய்தல்.
- அனைத்து நிறுவனங்களின் பயன்படுத்த முடியாத (கழிவுப்) பொருட்களையும் அகற்றுவது தொடர்பில் ஒருங்கிணைந்த அறிக்கையை தயாரித்தல்.
இதன்படி, 2022 டிசம்பர் மாதம் 5ஆம் திகதி அல்லது அதற்கு முன், பயன்படுத்த முடியாத (கழிவு) பொருட்களை அகற்றும் பணிகளை நிறைவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.