ஊடக சுதந்திரத்துக்கு அரசால் அச்சுறுத்தல்! ஐ.தே.க. குற்றச்சாட்டு
இலங்கையில் ஊடக சுதந்திரத்துக்கு அநுர அரசால் அச்சுறுத்தல் ஏற்படுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி இடமளிக்காது என அந்தக் கட்சியின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (26.12.2025) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
எழுந்துள்ள குற்றச்சாட்டு
சில ஊடகங்களின் உரிமத்தை இரத்துச் செய்வதற்கு அநுர அரசு முயற்சிக்கின்றது என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் மேற்படி கருத்தை வெளியிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஊடகங்களுக்குச் சுதந்திரமளிக்கும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் தான் தேவையான சட்டங்கள் கொண்டுவரப்பட்டன.

ஊடகங்களை அச்சுறுத்துதல்
தகவல் அறியும் உரிமை சட்டத்தைக்கூட ரணில் விக்ரமசிங்கவே கொண்டு வந்தார். மக்கள், அரசியல் பிரமுகர்கள் தவறிழைப்பது இயல்பு. ஆனால், அதனை ஊடகங்கள் சுட்டிக்காட்டும்போது திருத்திக் கொள்ள முற்பட வேண்டும்.
மாறாக ஊடகங்களை ஒடுக்குவதற்கு முற்படக்கூடாது. எனவே, ஊடகங்களை அச்சுறுத்துவது பாரதூரமான விடயமாகும். இதற்கு ஐக்கிய தேசியக் கட்சி இடமளிக்காது என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |