அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள மிகப் பாரியளவு பணம்.. வெளியான முக்கிய அறிக்கை
2026ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் அரசாங்கத்தின் மொத்த வருவாய் மற்றும் மானியங்கள் 27 வீதம் அதிகரித்து 2.956 டிரில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது.
நிதி அமைச்சின் நிதிக்கொள்கை திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள பொது நிதி ஆய்வறிக்கையின்படி, இக்காலப்பகுதியில் வரவு - செலவுத் திட்டப் பற்றாக்குறைக்கு பதிலாக 9.5 பில்லியன் ரூபா உபரி பதிவாகியுள்ளது.
2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 405.6 பில்லியன் ரூபா வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை பதிவாகியிருந்தது.
இருப்பினும், இம்முறை உபரி பதிவாகியமைக்கு அரச வருமானம் 27 வீதம் அதிகரித்தமையும், அரச செலவினங்கள் சீரமைக்கப்பட்டமையுமே முக்கிய காரணம் என அவ்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
பற்றாக்குறை
இதற்கிடையில், 2026ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் அரசாங்கத்தின் மொத்த வரி வருவாய் 2,710.6 பில்லியன் ரூபாவாக (2.71 டிரில்லியன் ரூபா) அதிகரித்துள்ளது.

இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 25.9 வீதம் அதிகரிப்பாகும். இதன்படி, ஆண்டின் மொத்த வரி வருவாய் இலக்கான 4.91 டிரில்லியன் ரூபாவில் 55.2 சதவீதத்தை முதல் ஆறு மாதங்களிலேயே அரசாங்கம் எட்டியுள்ளது.
வரி வருவாயில் அதிக பங்களிப்பை இலங்கை சுங்கம் வழங்கியுள்ளதுடன், அது 1,290 பில்லியன் ரூபாவைச் சேகரித்துள்ளது. இது மொத்த வரி வருவாயில் சுமார் 48 சதவீதமாகும். இரண்டாவது அதிகபட்ச பங்களிப்பை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வழங்கியுள்ளதுடன், அது 1,248 பில்லியன் ரூபா வருவாயை ஈட்டியுள்ளது.
இது மொத்த வரி வருவாயில் 46 சதவீதமாகும். தவிர, மதுவரித் திணைக்களம் 138 பில்லியன் ரூபா வருவாயை ஈட்டியுள்ளதுடன், ஏனைய வருவாய் வழிகளிலிருந்து 35 பில்லியன் ரூபா சேகரிக்கப்பட்டுள்ளது.
மொத்த வரி வருவாய்
சுங்க வருவாயில் பிரதான வருவாய் மூலமாக இறக்குமதிகளின் மீது விதிக்கப்பட்ட பெறமதி சேர் வரி (VAT) அமைந்துள்ளதுடன், இதன் மூலம் இந்த 6 மாதங்களில் 443.7 பில்லியன் ரூபா வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவான 354 பில்லியன் ரூபாவுடன் ஒப்பிடுகையில் 25 வீதம் அதிகரிப்பாகும்.

மோட்டார் வாகன வரியிலிருந்தான வருவாய் கணிசமாக அதிகரித்துள்ளதுடன், அது 129.1 பில்லியன் ரூபாவிலிருந்து 106.5 வீதம் அதிகரித்து 266.4 பில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது.
சுங்கத்தால் சேகரிக்கப்பட்ட மொத்த வரி வருவாயில் 63 சதவீதம் மோட்டார் வாகன இறக்குமதி வரியிலிருந்தே பெறப்பட்டுள்ளதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தால் சேகரிக்கப்பட்ட வருவாயில் வருமான வரி முக்கிய இடத்தைப் பிடித்துள்ளதுடன், அது 568.4 பில்லியன் ரூபா வருவாயை ஈட்டியுள்ளது.
இலங்கை பொருளாதாரம்
இது முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 16 சதவீத அதிகரிப்பாகும். கார்ப்பரேட் வருமான வரி 26 சதவீதத்தாலும், தனிநபர் வருமான வரி 15 சதவீதத்தாலும் அதிகரித்துள்ளன.

மேலும், உள்நாட்டு பொருளாதார நடவடிக்கைகளில் வசூலிக்கப்படும் பெறமதி சேர் வரி (VAT) வருவாய் 26 சதவீதமும், சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி 15 சதவீதமும் அதிகரித்துள்ளன.
அதேவேளை, மதுபானங்கள் மீது மதுவரித் திணைக்களத்தினால் சேகரிக்கப்பட்ட மதுவரி 27 சதவீதம் அதிகரித்து 137.5 பில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது. வரி வருவாய்க்கு மேலதிகமாக, வரி அல்லாத வருவாயும் 43.6 சதவீதம் அதிகரித்து 243.6 பில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது.
இருப்பினும், அரசாங்கத்தின் மொத்த செலவினம் 7.9 வீதம் அதிகரித்து சுமார் 2.95 டிரில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளதுடன், மீண்டெழுஞ் செலவினம் 6.5 வீதம் மற்றும் மூலதனச் செலவினம் 23.6 வீதம் அதிகரித்துள்ளன.
இதனிடையே, வட்டி செலுத்துகைகள் 2 வீதம் குறைந்து 1,234.6 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது. 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பதிவான 4.7 சதவீத வளர்ச்சியை விட, 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கை பொருளாதாரம் 5.1 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாக பொது நிதியியல் ஆய்வறிக்கை மேலும் தெரிவிக்கின்றது.