திறைசேரியின் 2.5மில்லியன் டொலர் மோசடியின் பின்னணியில் அரசாங்க ஆதரவாளர் - வெளியான தகவல்
அரசாங்க திறைசேரியில் ஹேக் செய்யப்பட்டதாகக் கூறப்படும் 2.5 மில்லியன் டொலர், அரசாங்க ஆதரவாளர் ஒருவரின் அவுஸ்திரேலிய வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் தொலவத்த குற்றம் சாட்டியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்டபோது அவர் மேற்கண்ட குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அரசாங்கத்துடன் தொடர்புடைய ஒரு முகவர்
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், திறைசேரியில் காணாமல் போன 2.5 மில்லியன் டொலர்கள், உண்மையில் ஒரு ஹேக்கரால் திருடப்படவில்லை, மாறாக அவுஸ்திரேலியாவில் வசிக்கும் தற்போதைய அரசாங்கத்துடன் தொடர்புடைய ஒரு முகவரால் திருடப்பட்டுள்ளது.

இந்த நிதி மோசடி தொடர்பாக அரசாங்கம் கூறும் தகவல்கள் தவறானவையாகும். 'ஒரு ஹேக்கரால் திருடப்பட்டதாகக் கூறப்படும் 2.5 மில்லியன் டொலர் குறித்து இன்று நாங்கள் நேரடியாகக் குற்றம் சாட்டுகிறோம், இது ஒரு ஹேக்கர் அல்ல.
இந்த அரசாங்கத்துடன் தொடர்புடைய ஒரு முகவர்தான் அவுஸ்திரேலியாவிலிருந்து இந்த 2.5 மில்லியன் டொலரைத் திருடியுள்ளார்.
கடந்த 76 ஆண்டுகளில் நடந்த ஊழல் மற்றும் மோசடிகளை விசாரிப்பதாகக் கூறி தற்போதைய அரசாங்கம் மக்களைத் தவறாக வழிநடத்துகிறது. ஆனால் இந்தக் குறுகிய காலத்தில், அரசாங்கத்துடன் தொடர்புடைய நபர்கள் மில்லியன் கணக்கான டொலர் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளனர்.
இந்த பணமோசடி தொடர்பான உண்மைகளை அரசாங்கம் உடனடியாக வெளிப்படைத்தன்மையுடன் வெளியிட வேண்டும் என்றும் பிரேமநாத் தொலவத்த கோரிக்கை விடுத்துள்ளார்.