இலங்கையிலும் எரிபொருள் விலையைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதன் பலனை இலங்கையிலுள்ள சாதாரண பொதுமக்களுக்கு அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கோரிக்கை விடுத்துள்ளார்.
கிண்ணியாவில் இன்று (27)இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், "ஈரான் மற்றும் ஓமான் இடையே எட்டப்பட்டுள்ள உடன்பாடுகளின் காரணமாக ஹோர்முஸ் நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்து சுமுகமடைந்துள்ளது.
இதன் எதிரொலியாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் கணிசமாகக் குறைந்து வருகின்றன. சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை அதிகரிக்கும்போதெல்லாம், அந்தப் சுமையை மக்கள் மீது சுமத்தி உடனடியாக இங்கு எரிபொருள் விலையை உயர்த்தும் அரசாங்கம், உலகச் சந்தையில் விலை குறையும்போது அதன் நன்மையை மக்களுக்கு வழங்கத் தயங்குவது ஏன்?
தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார சூழ்நிலையில், எரிபொருள் விலை குறைக்கப்பட்டால் மட்டுமே அத்தியாவசியப் பொருட்களின் விலைகள், போக்குவரத்து கட்டணங்கள் மற்றும் மீனவர்கள், விவசாயிகளின் உற்பத்திச் செலவுகள் குறையும்.
எனவே, உலக சந்தை நிலவரத்திற்கு ஏற்ப இலங்கையிலும் எரிபொருள் விலையைக் குறைத்து மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் மேலும் தெரிவித்தார்.