அமெரிக்க அரசாங்க முடக்க நிலை முடிவுக்கு…
அமெரிக்க அரசாங்கம் முடக்க நிலை முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 43 நாட்களாக அமெரிக்க அரசாங்க முடக்க நிலை நீடித்து வந்தது.
அமெரிக்க மத்திய அரசாங்கத்தினால் செலவுகளை மேற்கொள்ள முடியாத ஓர் நிலைமை காணப்பட்டது. சட்ட ரீதியாக செலவுகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
அரசாங்கத் துறைகள் செலவு செய்ய பணமின்றி தற்காலிகமாக நிறுத்தப்படும் நிலைமையை அரசாங்க முடக்க நிலை என அறிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக நிதிச் சட்ட பிரேரணைகளை அங்கீகரிக்க முடிாயத நிலையினால் இவ்வாறு முடக்க நிலை ஏற்படுகின்றது.
செலவு மேற்கொள்வதற்கான பிரேரணை அமெரிக்காவின் இரண்டு சபைகளிலும் அங்கீகரிக்கப்பட்டது.
காங்கிரஸ் சபையில் ஆதரவாக 222 வாக்குகளும் எதிராக 29 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன.
குடியரசு கட்சியினரும், மிதவாத ஜனநாயக கட்சியினரும் இணங்கி மேற்கொண்ட ஒப்பந்தத்திற்கு அமைய 2026 ஆம் நிதி ஆண்டுக்கான செலவுகளை மேற்கொள்ள இந்த சட்டப் பிரேரணை வழி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடக்க நிலை நீக்கம் காரணமாக ஏற்கனவே அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டிருந்த பணி நீக்கங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நூற்றுக்கணக்கான அரச பணியாளர்கள் மீண்டும் பணியில் இணைந்து கொள்ள உள்ளனர். அதேபோன்று அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் உணவு மற்றும் ஊட்டச்சத்து உதவி திட்டங்களும் மீண்டும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டப் பேரனைக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒப்புதல் அளித்து கையொப்பம் இட்டுள்ளார்.
ஜனநாயக கட்சியினர் அரசாங்கத்தை மிரட்ட முயற்சித்ததாகவும் அந்த மிரட்டலுக்கு அடிபணியாது வெற்றி கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த ஆவணத்தில் கையொப்பும் இடும்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். ஜனநாயக கட்சியை சேர்ந்த ஒரு சில உறுப்பினர்கள் குடியரசு கட்சிக்கு ஆதரவாக வாக்களித்ததன் அடிப்படையில் இந்த சட்டப் பிரேரணை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
முடக்க நிலை காரணமாக அமெரிக்காவின் பல்வேறு துறைகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக விமான போக்குவரத்து சேவை பாரியளவில் பாதிப்புகளை எதிர்நோக்கி இருந்தது.
விமான கட்டுப்பாட்டாளர்களுக்கான சம்பள கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டதனால் பெரும் எண்ணிக்கையிலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், அதிக எண்ணிக்கையிலான விமான பயணங்கள் காலம் தாழ்த்தப்பட்டன.
சுமார் 2000-க்கும் மேற்பட்ட விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
போதிய எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் இல்லாத காரணத்தினால் எதிர்காலத்திலும் டிரம்ப் அரசாங்கம் இவ்வாறான சவால்களை எதிர்நோக்க நேரிடலாம் என தெரிவிக்கப்படுகின்றது.