பொருட்களின் விலை ஏற்றத்திற்கு அரசாங்கத்திடம் தீர்வு கிடையாது! அம்பலப்படுத்தப்படும் விடயம்
தற்போதைய அரசாங்கம் வெட்கப்பட வேண்டும் என ஜே.வி.பி கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி நடாத்திய ஊடக சந்திப்பின் போது இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
நாட்டில் பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த முடியாத அரசாங்கம் வெட்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
மக்களின் தற்போதைய பிரச்சினைகள் பற்றி எவ்வித தெளிவும் அரசாங்கத்திடம் கிடையாது என்பது சில அமைச்சர்களின் கருத்துக்களின் மூலம் அம்பலமாகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
டொலரின் பெறுமதி உயர்வு உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மக்களின் மீது குற்றம் சுமத்தும் தொனியில் அரசாங்கத்தின் நிலைப்பாடு காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
பொருட்களின் விலை ஏற்றத்திற்கு அரசாங்கத்திடம் தீர்வு கிடையாது என நுகர்வோர் விவகார ராஜாங்க அமைச்சர் கூறுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரிசி மற்றும் சீனி ஆகிய பொருட்களின் விலை ஏற்றத்திற்கான பிரதான காரணம் அரசாங்கம் தனக்கு நெருக்கமானவர்களிடம் விலை நிர்ணயிக்கும் ஏகபோக உரிமையை வழங்கியுள்ளதேயாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருட்களின் விலை உயர்வடையும் போது அரசாங்கம் ஊடக கண்காட்சிகளை நடாத்தி மக்களை திசை திருப்புகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.