வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடம் அரசாங்கம் விடுத்த கோரிக்கை
இலங்கையில் அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில், வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்புவோர், பண பரிமாற்றத்தை குறைத்து வருவதாக தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் டொலரின் மதிப்பு மேலும் அதிகரிக்கும் என காத்துக்கொண்டிருக்க வேண்டாம் என புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களிடம் வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
தங்களிடமுள்ள டொலர்களை உடனடியாக இலங்கைக்கு அனுப்புமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசாங்கம் விடுத்த கோரிக்கை
நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் வசந்த சமரசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

“சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி யாராவது நுகர்வோரைச் சுரண்ட முற்பட்டால், அதற்கு எதிராக நாங்கள் நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம்.
பொருளாதார ரீதியாக சிலர் சில விடயங்களை தலைகீழாக பகுப்பாய்வு செய்கிறார்கள். எனவே, அவர்களைத் திருத்துவதற்கு எங்களுக்கு நேரமில்லை. நாளை விலை கூடும், மறுநாள் விலை கூடும் என டொலர்களை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை, உங்களுடைய டொலர்களை நாட்டிற்கு அனுப்புங்கள்.
சுற்றுலாத்துறை
அதேபோல், சுற்றுலாத்துறை மூலம் வரும் டொலர்களைக் கொண்டு வாருங்கள் என்பதையே வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடம் நாங்கள் கேட்டுக்கொள்ள விரும்புகின்றோம்.

ஏற்றுமதியாளர்களிடமும் உங்களுடைய டொலர்களை ரூபாயாக மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம். இல்லையெனில், நீங்களே இந்த பிரச்சினையின் பாதிப்புக்கு உள்ளாக நேரிடும்” என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.