சட்ட நடவடிக்கையின் காரணமாகவே ரணில் விடுவிக்கப்பட்டார்: தெளிவுப்படுத்திய அரசாங்கம்
இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சட்ட நடவடிக்கையின் காரணமாகவே விடுவிக்கப்பட்டார் என்பதை ஏற்றுக்கொள்ளுவதாக அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் நடைபெற்று வரும் விசாரணைகள் தொடர்பில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதன்படி, ரணில் விக்ரமசிங்க குற்றமற்றவர் என்பதனால் அல்ல, சட்ட நடவடிக்கையின் காரணமாகவே விடுவிக்கப்பட்டார் என்று, முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர் கூறியதை, தாம் ஏற்றுக்கொள்வதாக அமைச்சர் ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற விசாரணை
2015ஆம் ஆண்டு விக்ரமசிங்க பிரதமராகவும், நிதி அமைச்சராகவும் இருந்த போது இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான வரலாற்றை இலங்கை பொதுமக்கள் நன்கு அறிவார்கள் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அப்போது விக்ரமசிங்கவின் நெருங்கிய சகாவான அர்ஜுன மகேந்திரன் மத்திய வங்கி ஆளுநராக கடமையாற்றினார்.
அர்ஜுன மகேந்திரன் மீதான விசாரணையின் போது, ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் இந்த பிணைமுறி வழங்கல் இடம்பெற்றதாக நாடாளுமன்ற விசாரணையில் தெரியவந்துள்ளது.
எனினும், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, கோப் குழுவும் கலைக்கப்பட்டது என்பதையும் பொதுமக்கள் அறிவார்கள் என அமைச்சர் ஹேரத் தெரிவித்துள்ளார்.
பின்னர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தியின் கீழ் மற்றொரு கோப் குழு உருவாக்கப்பட்டது. ஆனால், அவரின் கண்டுபிடிப்புகள் நசுக்கப்பட்டன என்று விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஆளுநர்
இந்த சவால்கள் இருந்தபோதிலும், விக்ரமசிங்கவை நீதிமன்றத்திற்கு அழைப்பதற்கு எந்த தடையும் இல்லை என அமைச்சர் ஹேரத் உறுதியளித்துள்ளார்.
அந்தவகையில், அறிக்கைகள் மற்றும் ஆணைக்குழு அறிக்கைகளின் அடிப்படையில் விசாரணையை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இல்லாமல் நீதி வழங்க முடியாது.
எனவே, கிடைக்கக்கூடிய தரவுகளின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கு சிறிது காலம் எடுக்கும். எனினும், அரசாங்கம் யாரையும் பழிவாங்க முயற்சிக்கவில்லை என்றும் அமைச்சர் விஜித் ஹேரத் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |